×

நாளை முதல் போக்குவரத்து தொடக்கம்; ஒழுகினசேரி பழைய பாலத்தில் பணிகள் நிறைவு: ரயில்வே அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவில்: ஒழுகினசேரி பழைய பாலத்தில் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து நாளை முதல் போக்குவரத்து தொடங்கும் என தெரிகிறது. இன்று காலை அந்த பகுதியில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிக்காக நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி மற்றும் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது.

இந்த பணிகளுக்காக கடந்த மாதம் 28ம்தேதி முதல் ஒழுகினசேரி சந்திப்பு வழியாக சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நாகர்கோவில் மாநகரில் இருந்து வெளியேற வேண்டிய பஸ்கள், வாகனங்கள், நாகர்கோவில் நகருக்குள் வர வேண்டிய வாகனங்கள், பஸ்கள் அனைத்தும் அசம்பு ரோடு, புத்தேரி நான்கு வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒழுகினசேரியில் கூடுதல் தண்டவாளத்துக்கான பணிகளின் ஒரு கட்டமாக, தற்போது உள்ள பழைய ரயில்வே பாலத்தின் கீழ் மண் தோண்ட வேண்டும் என்பதால், பழைய பாலத்தை வலுவாக்கும் வகையில், அதன் அருகில் பில்லர்கள் அமைத்து, தற்காலிகமாக சிறு கான்கிரீட் பாலம் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

பாலத்தின் கீழ் பகுதியில் தோண்டும் போது, பாலம் வலுவிழக்காமல் இருக்கும் வகையில் இந்த தற்காலிக கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டு, பழைய பாலத்துடன் இணைக்கும் பணிகள் முடிவடைந்தன. கான்கிரீட் உறுதியானதை தொடர்ந்து அதன் மேல் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. மேலும் இரு பக்கமும் மண் சரிவை தடுக்கும் வகையில் தற்காலிகமாக கான்கிரீட் கலவை கொண்டு சமன் செய்யும் பணி நடக்கிறது. இந்த பணியும் இன்றுடன் முடிவடையும் என தெரிகிறது. இதையடுத்து நாளை (20ம்தேதி) முதல் போக்குவரத்து தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த பணிகளை இன்று ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். ஆய்வுக்கு பின், மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை அளிப்பார்கள். அதன் பேரில் சாலை போக்குவரத்துக்கு மாவட்ட கலெக்டர் தர் அனுமதி அளிப்பார் என தெரிகிறது. கடந்த மாதம் 28ம்தேதி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 24 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடங்க உள்ளது.

The post நாளை முதல் போக்குவரத்து தொடக்கம்; ஒழுகினசேரி பழைய பாலத்தில் பணிகள் நிறைவு: ரயில்வே அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Oglukinassery ,Railway ,Nagercoil ,Kanyakumari ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED வள்ளியூர் ரயில்வே பாலத்தில்...