×

ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!

நன்றி குங்குமம் தோழி

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமயமாகவும் செய்து விற்பனை செய்து வருகிறார் ரெஜினா. மண்ணில் கைவினைப் பொருட்களை செய்து அதில் புதுப்புது டிசைன்களை வரைந்து பளபளப்பாகவும், வண்ணமயமாகவும் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறார். ‘pottery kaari’ என்ற பெயரில் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் தான் செய்யும் பொருட்களை எல்லாம் பதிவிட்டு விற்பனை செய்கிறார் இவர்.

‘‘எனக்கு சொந்த ஊர் உத்திரமேரூர். நான் கோவையில் பொறியியல் படிச்சேன். அதன் பிறகு ஐ.டி துறையில் வேலை கிடைத்தது. வேலைக்கு சென்று கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் மண்ணைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்வது பற்றி தெரிந்து கொண்டேன். நான் சிறு வயதிலேயே ஓவியங்கள் வரைவது, டிசைன் செய்வது, மண்டேலா ஓவியங்கள் என அனைத்தும் கற்றுக்கொண்டேன். அதனால் மண்பாண்டங்கள் பற்றி தெரிந்ததும், அதனையும் கற்றுக்கொள்ள விரும்பினேன். எனக்கு இது போன்ற கைவினைப் பொருட்கள் மேல் ஈர்ப்பு ஏற்படக் காரணம் நான் பார்த்து வந்த வேலை. தினமும் முகம் தெரியாத மூன்றாவது நபருக்காக ராப்பகலா உழைக்கிறோம்.

அதனால் நமக்கான நேரம் பற்றி யோசிக்கவோ ஒதுக்கவோ எண்ணம் ஏற்படுவதில்லை. எப்பவும் வேலை பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் நிறைய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் அவை. நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் போது எனக்கு அந்த நாட்கள்தான் நினைவிற்கு வரும். இந்த வேலை என்னுடைய அதிகமான நேரத்தை ஆக்கிரமித்திருந்தது. எனக்கான நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே மண்பாண்ட பொருட்களை செய்ய கற்றுக்கொண்டேன்’’ என்றவர் அதுவே எவ்வாறு அவரின் தொழிலாக மாறியது என்பது பற்றி விவரித்தார்.

‘‘மண்ணால் செய்யப்படும் பொருட்கள் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் அவை அனைத்தும் ஒருவரின் கைகளால் உருவாக்கப்படுகிறது. உடலுக்கும் தீங்கு விளைவிக்காது. அதனாலேயே இப்போது பலர் மண்பாண்ட பொருட்களுக்கு மாறி வருகிறார்கள். தங்களின் சமையலுக்கும் அதனையே பயன்படுத்த துவங்கியுள்ளனர். மேலும் அவை அழகான வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் வருவதால், மக்களின் மனதினை அதிகம் ஈர்த்து வருகிறது.

நான் இதை செய்ய கற்றுக்கொள்ளத் தொடங்கியதும் வேலைக்கு சென்று கொண்டே இதையும் ஒரு தொழிலாக செய்யலாம் என்றுதான் நினைத்தேன். மேலும் எனக்கு வரையத் தெரியும் என்பதால் நான் செய்யும் பொருட்களில் என் மனதுக்குப் பிடித்த டிசைன்களை வரையத் தொடங்கினேன். வேலை நேரம் போக மீதி நேரங்களில் மண்ணில் டீ கப், கிளாஸ், தட்டுகள் இவற்றையெல்லாம் செய்து அதை என் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன். என் கணவரும் இதற்கு எனக்கு உதவியாக இருந்தார். என்னுடைய ஒவ்வொரு பொருட்களுமே
தனித்தன்மையாக இருக்கும். அதனால் ஒரே டிசைனை நான் மீண்டும் மீண்டும் கொடுக்க மாட்டேன். சொல்லப்போனால் இதில் என்னுடைய ஐடியாவும், டிசைன்களும்தான் முதலீடு.

இந்த வேலையை பொறுத்தவரை முதலில் சரியான முறையில் மண்ணை கலந்து அதில் நாம் செய்ய நினைக்கும் பொருளின் வடிவத்திற்குக் கொண்டு வர வேண்டும். அது காய்ந்த பிறகு அதில் டிசைன்களை வரைந்து தீயில் வாட்டுவேன். அதன் பிறகு அதனை பளபளப்பாக்கி தேவையான வண்ணங்கள் கொண்டு அலங்கரிக்கலாம். இதில் ஒரு பொருள் மட்டுமே செய்ய குறைந்தபட்சம்
இரண்டு நாட்களாகும். ஆரம்பத்தில் என் பொருட்கள் பெரிய அளவில் விற்பனையாகவில்லை.

நானும் ஒவ்வொரு புது டிசைன்களை செய்து அதில் பதிவு செய்து வந்தேன். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர்கள் வரத் தொடங்கியது. என்னுடைய பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்க தொடங்கினார்கள். நிறைய ஆர்டர்கள் குவிந்தது. என்னால் வேலையும் பார்த்துக்கொண்டு ஆர்டர்களையும் எடுத்து செய்ய முடியவில்லை.

மேலும் எனக்கு ஐ.டி வேலையை விட இந்த வேலை மனசுக்கு நிறைவினை கொடுத்தது. அதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். என் கணவரும் என்னுடைய விருப்பத்திற்கு சிக்னல் காண்பிக்க, கடந்த வருடம் ஐ.டி வேலையை ராஜினாமா செய்து, முழு நேரம் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். முழு நேரம் இது பற்றிய சிந்தனையாக இருப்பதால், பலவித புதுப்புது டிசைன்களை அறிமுகம் செய்ய முடிகிறது. ஆர்டர்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அது எனக்குள் பெரிய அளவில் உற்சாகத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் பல டிசைன்களில் பொருட்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. சிலர் அவர்களுக்கு ஏற்ப டிசைன் செய்யச் சொல்லிக் கேட்பார்கள். கஸ்டமைஸ்ட் ஆர்டர்களும் செய்து வருகிறேன்.

பெண்கள் இப்போது வேலைக்கு செல்கிறார்கள். அதேசமயம் ஒரு எண்ணிக்கை பெண்கள் சொந்தமாக தொழிலில் ஈடுபடவும் செய்கிறார்கள். தங்களுக்கான திறமையை வளர்த்துக் கொண்டு அதையே அவர்கள் தொழிலாக மாற்றி அமைத்தால், எதிர்காலத்தில் பல பெண்கள் தொழில்முனைவோர்களாக மாறுவார்கள். சொந்தமாக தொழில் செய்யும் போது அது அவர்களுக்கான மனத் திருப்தியை கொடுக்கும்’’ என்கிறார் ரெஜினா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது! appeared first on Dinakaran.

Tags : kumkum dothi Regina ,Dinakaran ,
× RELATED சாதிக்க துடிக்கும் பெண்கள்...