×

சுசீந்திரம் கோயில் தேர்களுக்கு கூண்டு அமைக்கும் பணி தீவிரம்: எல்லா நாட்களிலும் தேரின் அழகை ரசிக்க முடியும்

 

நாகர்கோவில், பிப்.19: சுசீந்திரம் கோயில் தேருக்கு பாலி கார்பனேட் தாள்கள் கொண்ட கூண்டு அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுசீந்திரம் கோயிலில் உள்ள 4 தேர்களுக்கும் கூண்டு கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இனி தேரின் அழகை எல்லா நாட்களிலும் ரசிக்க முடியும். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களில் உள்ள தேர்கள் தகர கொட்டகைகளால் மூடப்பட்டு இருந்தது. தேரோட்டத்தின் போது மட்டுமே இந்த தகர கொட்டகைகள் பிரிக்கப்பட்டு தேரை பார்க்க முடியும்.

மற்ற நாட்களில் தேர் தகர கொட்டகையால் மூடப்பட்டு இருப்பதால் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தேரின் அழகை பார்க்க முடியாத நிலை இருந்தது. இதை தவிர்க்கும் வகையில் முக்கிய கோயில்களில் தேர்களை சுற்றி பாலி கார்பனேட் தாள்கள் கொண்ட கூண்டு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் பறக்கை மதுசூதன பெருமாள் கோயில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில் தேர்களுக்கு பாலி கார்பனேட் தாள்கள் கொண்ட கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோயில் தேருக்கும் பாலிகார்பனேட் தாள்கள் கொண்ட கூண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், இந்திரன் ஆகிய 4 தேர்கள் உள்ளன. இதில் சுவாமி தேர் மிகப்பெரிய தேர் ஆகும். இந்த 4 தேர்களுக்கும் மொத்தம் ரூ.60 லட்சம் செலவில் பாலி கார்பனேட் தாள்கள் கொண்ட கூண்டு அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது.

தற்போது அம்பாள் தேருக்கு பாலி கார்பனேட் தாள்கள் கொண்ட கூண்டு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் 4 தேர்களுக்கும் கூண்டு கட்டும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல் நாகர்கோவில் நாகராஜா கோயில் தேருக்கும் சுமார் ரூ.9 லட்சம் செலவில் பாலி கார்பனேட் தாள்கள் கூண்டு அமைக்கும் பணி நடக்கிறது. இதன் மூலம் தேரின் அழகை பக்தர்கள் எல்லா நாட்களிலும் ரசிக்க முடியும். அறநிலையத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் பெரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

The post சுசீந்திரம் கோயில் தேர்களுக்கு கூண்டு அமைக்கும் பணி தீவிரம்: எல்லா நாட்களிலும் தேரின் அழகை ரசிக்க முடியும் appeared first on Dinakaran.

Tags : Susindram ,Nagercoil ,Susindram temple ,Suchindram Temple ,Suseendram temple ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...