×

உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் லாரி-மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

 

உளுந்தூர்பேட்டை, பிப். 19: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை ஒரு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சேகர் (45) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் ரோடு மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலைத்தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி எதிரே புதுச்சேரியில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற மினி வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் லாரி டிரைவர் சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரும் மினி வேன் டிரைவர் பெரம்பலூர் அரியகுரும்பலூரை சேர்ந்த ராஜா (34) என்பவரும் படுகாயம் அடைந்தனர். 2 வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் மோதி நின்றதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு அசோக்குமார் தலைமையிலான குழுவினர் ஆகியோர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் விபத்துக்குள்ளான லாரி மற்றும் மினிவேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இவ்விபத்தினால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் நின்று, 2 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட மினி வேனில் 400க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் இருந்ததால் பொதுமக்கள் அதனை எடுக்க சென்றனர். அப்போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மினிவேனில் மதுபாட்டில் கடத்தி செல்லப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் லாரி-மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,National Highway ,Trichy ,Chennai ,Kallakurichi district ,Shekhar ,Medavakkam ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...