×

போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள அரண்வாயல் – புட்லூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

திருவள்ளூர், பிப். 19: திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரயில் நிலையம் அருகே கதிரவன்நகர், ஜி.எம். நகர், கோவிந்தராஜா அவென்யூ, ராமகிருஷ்ணா நகர், கோமதியம்மன் நகர், மூங்காத்தம்மன் நகர் என 30க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் உள்ளன. இதில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ரயில் நிலையத்தின் மறுபுறத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலும் உள்ளது. இந்த கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதுண்டு.

மணவாளநகர், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், நேமம், வெள்ளவேடு, திருமழிசை, பூந்தமல்லி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு வருபவர்கள் அரண்வாயலில் இருந்து புட்லூர் ரயில் நிலையம் வரை செல்லும் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். அதே போல் புட்லூரில் இருந்து அரண்வாயல், அரண்வாயல் குப்பம், நேமம், வெள்ளவேடு, திருமழிசை, பூந்தமல்லி, மணவாளநகர், திருவள்ளூர், சென்னைக்கு செல்பவர்கள் வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் இந்த சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட தலைநகரை ஒட்டியுள்ள இந்த புட்லூர் பகுதி வளர்ந்து வரும் பகுதியாக மாறி வருகிறது. இதனால் இங்கு புதியதாக உருவாக்கப்படும் நகர்களில் அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வீடு கட்டுவதற்காக டிப்பர் லாரி, டாரஸ் லாரிகள் மூலம் சிமெண்ட், செங்கல், மணல், மண் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வருகின்றனர். அதே போல் சிலிண்டர் ஏற்றி வரும் லாரியும் இந்த வழியாகத்தான் வந்து செல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 2 கி.மீ. தூரம் உள்ள இந்த சாலை தற்போது இரு சக்கர வாகனம் முதல் ஆட்டோ, கார் போன்ற எந்த வாகனமும் ஓட்டுவதற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து அரண்வாயல் – புட்லூர் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ள அரண்வாயல் – புட்லூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aranwayal – Putlur road ,Thiruvallur ,Putlur Railway Station Katiravannagar ,G.M. Nagar ,Govindaraja Avenue ,Ramakrishna Nagar ,Gomatiamman Nagar ,Moongathamman Nagar ,Aranwayal – ,Putlur ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...