×

அரசு மருத்துவமனை வளாகத்தின் தடுப்பு சுவரிலிருந்து விழுந்து வாலிபரின் இடுப்பு எலும்பு முறிவு

 

திருவள்ளூர், பிப். 19: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோயாளிகள் வந்து செல்கின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோரை மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது, அவசர சிகிச்சைப் பிரிவு முதல் தளத்தில் இருப்பதால் சாய்தளம் மூலம் வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். இதற்காக தரை தளத்திலிருந்து முதல் தளத்திற்கு வரும் வழியில் சாய்தளம் ஓரத்தில் தடுப்பு சுவர் எழுப்பி உள்ளனர்.

இந்த தடுப்பு சுவருக்கும், மருத்துவமனை கட்டிடத்திற்கும் இடையே இடைவெளி இருக்கிறது. அங்கு பாதுகாப்புக்கான சுவரோ, தரைதளமோ இல்லாமல் பள்ளமாக இருப்பதால் அங்கே யாரும் அமராத வகையில் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளி்கள் மற்றும் அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருக்கைகள் இல்லாததால் அந்த தடுப்பு சுவரில் ஆபத்தான நிலையில் அமர்கின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமம், பள்ளித் தெருவைச் சேர்ந்த மணி மகன் கமல்(27) என்பவர் நேற்று இரவு உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனக்கு வந்துள்ளார். அங்கு அவர் அந்த தடுப்பு சுவற்றின் மீது அமர்ந்துள்ளார். அப்போது இடைவெளி இருப்பதை அறியாமல் சாய்ந்தவர் முதல் தளத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் அவருடைய இடுப்பு எலும்பு முறிந்து விட்டது. இதனையடுத்து அவரை உடனடியாக மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். எனவே சாய்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரின் அருகில் யாரும் தவறி கீழே விழாதவாறு தடுப்புகள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அரசு மருத்துவமனை வளாகத்தின் தடுப்பு சுவரிலிருந்து விழுந்து வாலிபரின் இடுப்பு எலும்பு முறிவு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District Government Medical College Hospital ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...