×

கெட்டுப்போன புளியோதரை பிரசாதம் விற்பனை: கோயில் நிர்வாகம் கண்டிப்பு

சோழிங்கநல்லூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கெட்டுப்போன புளியோதரையை விற்ற தனியார் பிரசாத விற்பனையாளரை கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் தற்போது, மாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்கள் சிலர், வடிவுடையம்மன் சன்னதி அருகே அமைந்துள்ள தனியார் பிரசாதம் விற்பனை செய்யும் கடையில் புளியோதரை வாங்கினர். அப்போது அதில் கெட்டுப்போன நாற்றம் வீசியதால், வாங்கியவர்கள் புளியோதரை கெட்டுப்போய் உள்ளது என்பதால் திருப்பி ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோயில் நிர்வாக அலுவலர்கள், கெட்டுப்போனதாக கூறப்படும் புளியோதரையை விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் அவற்றை கோணி மூட்டையில் கட்டி, குளக்கரை அருகேயுள்ள குப்பைத்தொட்டியில் போட்டு விட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் நேற்று முன்தினம் மீதமான பழைய புளியோதரையை, நேற்று தயார் செய்யப்பட்ட புளியோதரையுடன் சேர்த்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் விற்பனையாளர்களை எச்சரித்தனர்.

The post கெட்டுப்போன புளியோதரை பிரசாதம் விற்பனை: கோயில் நிர்வாகம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chozhinganallur ,Tiruvottiyur Vadudayamman ,Thiruvottiyur ,Thyagaraja Swamy Udanurai Vadudayamman Temple ,Masi Brahmotsava festival ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...