×

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அங்கன்வாடி வேலைகளில் முன்னுரிமை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர்: ‘பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அங்கன்வாடி, காலை சத்துணவு திட்ட பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்’ என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ராமுத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண உதவிகளை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சி.வி.கணேசன், கலெக்டர் ஜெயசீலன், சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் உள்பட பலர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் இரங்கல் தெரிவித்து, வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்புப் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ரூ.2.05 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்த 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ள னர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிரந்தர வேலை கோரி மனுக்கள் அளித்துள்ளனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அங்கன்வாடி, காலை சத்துணவு திட்ட பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்றார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘பட்டாசு ஆலைகளை வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை கண்காணித்து வருகிறது. மனித தவறால் விபத்துக்கள் நடக்கிறது. தற்போதைய விபத்தும் மருந்து கலக்கும் போது நடந்துள்ளது. விதிமீறி இயங்கிய 30 ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. தற்போது விபத்து நடந்த ஆலையையும் மூட உள்ளோம்.
எதிர்காலத்தில் விபத்து நடக்காமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்கிறோம்’’ என்றார்.

* பட்டாசு ஆலை மேலாளர் கைது

பட்டாசு ஆலை விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால், போர்மேன் சுரேஷ்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் அஜாக்கிரதையாக செயல்பட்டு மனித உயிருக்கு சேதம் ஏற்படுத்தியது, வெடிபொருட்களை முறையாக கையாளாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் போர்மேன் சுரேஷ்குமாரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். ஆலை மேலாளர் ஜெயபாலை நேற்று கைது செய்தனர். ஆலை உரிமையாளர் விக்னேஷை தேடி வருகின்றனர்.

* நெல்லையில் புதிய பஸ் நிலையம் உட்பட ரூ.570 கோடியில் திட்டங்கள் திறப்பு

நெல்லையில் புதிய சந்திப்பு பஸ் நிலையம், கூட்டுக் குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்களின் துவக்க விழா மற்றும்அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை சந்திப்பு பெரியார் பஸ் நிலையத்தில் நேற்று காலை நடந்தது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

* ரூ.86 கோடியில் கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் திட்டம் துவக்கம்

கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறனை கண்டறிய ‘கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் திட்டம்’ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 620 கிராம ஊராட்சிகளுக்கும் ரூ.86 கோடி மதிப்பில் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. அதனன்படி, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் துவக்க விழா மதுரையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கிராம மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

The post பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அங்கன்வாடி வேலைகளில் முன்னுரிமை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Minister ,Udayanidhi Stalin ,Virudhunagar ,Udhayanidhi Stalin ,Ramutevanpatti ,Sivakasi, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...