×

பிரச்னைகளுக்கு தீர்வு காண விவசாயிகளுடன் அமைச்சர்கள் 4ம் கட்ட பேச்சுவார்த்தை: கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை

சண்டிகர்: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண சண்டிகரில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடத்தினர். விரைவில் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகளுக்கான சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி, மின்கட்டண உயர்வு மற்றும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் கடந்த 13ம் தேதி டெல்லி நோக்கி பேரணி புறப்பட்டனர்.

கடந்த 2020ம் ஆண்டைப் போல மீண்டும் டெல்லியில் பெரிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதை தடுக்க போலீசார் மாநில எல்லையிலேயே விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால், பஞ்சாப், அரியானா மாநில எல்லையான ஷம்பு உள்ளிட்ட பல்வேறு எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் நீண்ட வரிசையில் குவிந்தனர். அதே சமயம் விவசாயிகளை சமாதானப்படுத்த கடந்த 8, 12, 15ம் தேதிகளில் 3 கட்டமாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பேச்சுவார்த்தை நீடிப்பதால், டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் அமைதி காத்து வருகின்றனர். இந்நிலையில், 6வது நாளாக நேற்றும் விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து முகாமிட்டிருந்தனர். ஷம்பு எல்லையில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சங் தலேவால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘விரைவில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தும் நிலை உள்ளது. அதுவரையிலும் பேச்சுவார்த்தையை இழுத்துக் கொண்டே போகலாம் என ஒன்றிய அரசு நினைக்கக் கூடாது.

தேர்தல் நடத்தை விதிகள் அறிவிப்பதற்கு முன்பாகவே விவசாயிகள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் விதிகள் அமலானாலும் எக்காரணத்தை கொண்டும் இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்’’ என்றார். அரியானாவின் குருஷேத்ராவில் நடந்த மகா பஞ்சாயத்து நிகழ்ச்சிக்குப் பின் பேட்டி அளித்த பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் குர்ணம் சிங் சாருனி, ‘‘அடுத்தகட்டமாக நாங்கள் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இப்போது நாங்கள் அமைதியாக இருக்கிறோம். விரைவில் எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் விரைவில் போராட்டம் தீவிரமடையும்.

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டத்தை கடுமையாக்குவோம்’’ என எச்சரித்துள்ளார். இந்த பரபரப்பான சூழலில், விவசாய பிரதிநிதிகளுடனான ஒன்றிய அரசின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நேற்றிரவு நடந்தது. இதில் ஒன்றிய வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்றனர். பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் சிங் மானும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த இப்பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.

The post பிரச்னைகளுக்கு தீர்வு காண விவசாயிகளுடன் அமைச்சர்கள் 4ம் கட்ட பேச்சுவார்த்தை: கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Union ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்