×

ஒன்றிய அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு: டெல்லியை நோக்கி அணிவகுக்கும் டிராக்டர்கள்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை நடக்கும் ஒன்றிய அமைச்சர்களுடன் நடக்கும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், போராட்டம் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. இதற்காக டெல்லியை நோக்கி செல்ல ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன.

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) நிர்ணயிப்பது போன்ற, ஏற்கனவே வழங்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி விவசாய அமைப்புகள் இன்றுடன் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி எல்லைப்பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அம்பாலா அடுத்த ஷம்பு எல்லை பதற்றமுடனே காணப்படுகிறது. விவசாய அமைப்புகள் மற்றும் ஒன்றிய அரசு இடையே ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், இதுவரை சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

ஏற்கனவே வழங்கிய உத்திரவாதங்களை மட்டுமே நிறைவேற்றக் கோருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், விவசாயிகள் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், விவசாயத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் இடையேயான, நான்காம் கட்ட பேச்சுவார்த்தை சண்டிகரில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இதுகுறித்து பஞ்சாப் – அரியானா எல்லையில் ஷம்புவில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் பாந்தர், ‘ஷம்பு எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் ஆறாவது நாளை எட்டியுள்ளது. எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சர்களுடன் தெரிவித்துவிட்டோம். அவர்கள் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க சிறிது கால அவகாசம் கேட்டுள்ளனர். இருந்தும் இன்று ஒன்றிய அமைச்சர்களுடன் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.

எங்களது மூன்று முக்கியமான கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை. குறிப்பாக பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்தல் தொடர்பான அவசரச் சட்டம் கொண்டு வருமாறு கேட்டுள்ளோம். சுவாமிநாதன் கமிஷன் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். போலீஸ் பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும்’ என்றார்.

இன்று மாலை நடக்கும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், டெல்லி நோக்கிய பேரணியை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதற்காக டெல்லியை நோக்கி செல்ல ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. அதனால் ஒன்றிய அமைச்சர்களுடனான இன்றைய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

The post ஒன்றிய அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு: டெல்லியை நோக்கி அணிவகுக்கும் டிராக்டர்கள் appeared first on Dinakaran.

Tags : Union ,Delhi ,New Delhi ,EU ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை