×

ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் கட்டப்பட்ட புதிய வணிகவரி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ரூ.28.77 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை பொதுமக்கள் இணைய வழியாக பெறும் சேவை மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள பதிவறைகளில் ரூ.6.75 கோடி செலவில் பொருத்தப்பட்ட இரண்டு இணையவழி புகைப்படக் கருவிகள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.02.2024 அன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள். 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மாநிலத்தின் வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பங்களிக்கும் முக்கிய துறையாக வணிகவரித்துறை விளங்கி வருவதோடு, வரி வசூல் மற்றும் வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனையும் உறுதி செய்து வருகிறது. மேலும், பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

வணிகவரித் துறை அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல்:

ஈரோடு மாநில வரிக் கோட்டத்திற்குட்பட்ட இணை ஆணையர் வரிவிதிப்பு மற்றும் நுண்ணறிவு கோட்ட அலுவலகம், சேவை மற்றும் சரக்கு வரி மேல்முறையீட்டு அலுவலகம், உதவி ஆணையர், திண்டல், பெருந்துறை மற்றும் சென்னிமலை வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் 61601 மொத்தம் 6 அலுவலகங்களுக்கு ஈரோட்டில் 14 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம்;

ஈரோடு மாநில வரிக் கோட்டத்திற்குட்பட்ட சத்தியமங்கலத்தில் 1 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவிலும், கோபிச்செட்டிபாளையத்தில் 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்:

திருச்சிராப்பள்ளி மாநில வரிக் கோட்டத்திற்குட்பட்ட துறையூரில் 1 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவிலும், புதுக்கோட்டையில் 85 இலட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்:

திருநெல்வேலி வணிகவரி கோட்டத்திற்குட்பட்ட, துணை ஆணையர், தூத்துக்குடி சரக அலுவலகம், உதவி ஆணையர், தூத்துக்குடி-1, 2 மற்றும் 3 ஆகிய வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்களுக்கு தூத்துக்குடியில் 4 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம் என மொத்தம் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரித் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

* பதிவுத்துறை அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல்

திண்டிவனம் பதிவு மாவட்டத்தில், அரகண்டநல்லூரில் 1 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவிலும், பழனி பதிவு மாவட்டத்தில், சத்திரப்பட்டியில் 1 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

* சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை இணைய வழியாக பெறும் சேவையினை தொடங்கி வைத்தல்

பதிவுத்துறை தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்கள் தற்போது ஒளிவருடல் செய்யப்பட்டு மையக் கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. சொத்து தொடர்பான (உயில், டிரஸ்ட், இதர ஆவணங்களை தவிர்த்து) எந்த ஆவணத்திற்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும். தேவையான கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தி பொதுமக்கள் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது. ஒளிவருடல் செய்யப்பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கும். அதிவிரைவாக மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஏதுவாக, அதிவிரைவு சேமிப்பு கலன்கள் (SSD Solid State Drive) 31 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு ஆவண நகல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்கள் https://tnreginet.gov.inஎன்ற இனிதாய்வழியாக பெரும் சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
உயில், டிரஸ்ட் ஆவணங்களின் நகல்கள் சரியான நபருக்கு அவரின் அடையாள விபரங்கள் சரிபார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பொதுமக்கள் சொத்து தொடர்பான எந்த ஒரு சான்றிட்ட நகலுக்காகவும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. 1865-ஆம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் நகல்கள் உலகின் எந்த மூலையில் உள்ள பொதுமக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள பதிவறைகளில் இரண்டு இணையவழி புகைப்படக் கருவிகள் (IP Camera) பொருத்திடுதல்

பதிவுத்துறையின் அனைத்து தற்போதுள்ள மூன்று சார்பதிவாளர் இணையநெறிமுறை அலுவலகங்களிலும் புகைப்படக்கருவிகளுடன் 6 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் சார்பதிவகங்களில் உள்ள பதிவறைகளில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு இணையநெறிமுறை புகைப்படக் கருவிகளின் (IP Camera) பயன்பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி. வணிகவரி ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன், பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் கட்டப்பட்ட புதிய வணிகவரி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Commercial Tax Office ,Erode ,Procurator's Office ,M.M. K. Stalin ,CHENNAI ,COMMERCIAL TAX AND REGISTRATION DEPARTMENT ,New Commercial Tax Office ,Governor General ,K. Stalin ,Dinakaran ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...