×

கைத்தறி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு

 

கோவை, பிப். 18: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது: தமிழ்நாட்டில் பாரம்பரிய மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து துணி ரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, 100 கைத்தறிகள் அமைக்கவும், அதற்கு தேவையான தொழிற்கூடம் மற்றும் குடோன் வசதி அமைத்து மின்சார இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள்(சிஎப்சி) உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் வசதிக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள், நெசவாளர்கள் ஆகியோர் சிறப்பு நோக்கு முகமை அமைத்து வியாபார சந்தை, தொழில் நுட்பம் மற்றும் கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தி செய்ய தேவையான மூலதனம் ஆகியவற்றை கொண்டு வந்து பொது வசதி மையத்தில் உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம்.

கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர் இந்த சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழிலில் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை பெற விருப்பமுடையவர்கள் www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post கைத்தறி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,District ,Collector ,Krantikumar Badi ,Tamil Nadu ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்