×

370 தொகுதிகளில் வெல்வது உறுதி: பாஜ தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் மோடி பேச்சு

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, பாஜ தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடக்கும் இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 11,500 நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளிலும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக இதே போன்ற தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பாஜ கூட்டியது.

முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் இக்கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிகளும் அவரவர் வாக்குச்சாவடியில் முழு கவனம் செலுத்த வேண்டும். 2019 மக்களவை தேர்தலில் நாம் வென்றதை விட அதிகமாக இம்முறை 370 தொகுதிகளில் பாஜவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இது வெறும் நம்பர் அல்ல. இது ஒரு ஆழமான உணர்வை குறிக்கிறது. நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை காக்க காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய பாஜ சித்தாந்தவாதி சியாமா பிரசாத் முகர்ஜி தன்னிகரில்லாத தியாகம் செய்தார். அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக 370 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தேவையற்ற மற்றும் உணர்ச்சிகரமான பிரச்னைகளை எழுப்புவார்கள். அதில் கவனத்தை சிதறவிடக்கூடாது. நாட்டின் வளர்ச்சி, ஏழைகளுக்கு செய்யும் நலத்திட்ட உதவிகள், உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பது போன்றவை முன்னிறுத்தி கட்சி நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும். இது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத, வளர்ச்சிக்கான யுகம். எனவே நாம் 370 தொகுதிக்கு மேல் வெல்வது உறுதி. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், ‘‘2014ல் மோடியின் வளர்ச்சிக்கு முன்பாக பாஜ 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்தது. இப்போது 12 மாநிலங்களில் பாஜ ஆட்சி நடக்கிறது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. தாமரை எங்கும் மலர்ந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பாஜ கூட்டணி 3வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

The post 370 தொகுதிகளில் வெல்வது உறுதி: பாஜ தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,executive ,New Delhi ,Lok Sabha elections ,National Executive Committee ,Bharat Mandapam ,Delhi ,Lok Sabha ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு