×

செங்குன்றம் அருகே பகுதி நேர ரேஷன் கடை: சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

புழல்: செங்குன்றம் அருகே பகுதி நேர ரேஷன் கடையை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் திறந்து வைத்தார். செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட எராங்குப்பம் சாலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் நேற்று வரை பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதனால், இக்கட்டிடத்தில் சமூகவிரோதிகள் மது அருந்துவதும் சூதாட்டம் விளையாடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட எராங்குப்பம், சரத்து கண்டிகை, பழைய பம்மதுகுளம், வடுகர் காலனி உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதி சேர்ந்த பொதுமக்கள், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு 2 கிலோ மீட்டர் தூரமுள்ள லட்சுமிபுரம் பகுதியில் உள்ள பகுதிநேர ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வந்து சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் ராஜாவிடம் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை ஏற்று பலமுறை சம்பந்தப்பட்ட ஆவடி உணவுப்பொருள் துறை அதிகாரியிடமும், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளுடன் புகார் தெரிவித்ததன் பேரில், திறக்கப்படாமல் இருந்த ரேஷன் கடை கட்டிடத்தை புதுப்பித்து, அதன் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சதீஷ்குமார், ஒன்றிய திமுக செயலாளர் மோரை தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு, பகுதி நேர ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணை தலைவர் பூங்காதை, மாவட்ட திமுக பிரதிநிதி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post செங்குன்றம் அருகே பகுதி நேர ரேஷன் கடை: சுதர்சனம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Sengunram ,Sudarsanam MLA ,Puzhal ,Madhavaram MLA ,Sudarsanam ,Senkunram ,Eranguppam ,Bammadukulam panchayat ,
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து 2 பேர் பலி