×

குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் கைது

தாம்பரம்: தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில், நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று வேளச்சேரி பிரதான சாலை – கேம்ப் ரோடு சந்திப்பு அருகே அவ்வை நகர் தெருவில் திரும்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அப்பகுதியில் உள்ள ராஜாராம் (63) என்பவரது வீட்டு காம்பவுண்ட், ஜன்னல் மீதும், ஆளவந்தார் (82) என்பவரது வீட்டின் காம்பவுண்ட் கேட் மீதும், பாரதிநகர், பாளையத்தம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த மதன்குமார் (30) என்பவரது காரின் மீதும் மோதி நின்றுள்ளது. இதனால், ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் அதிர்ச்சியடைந்து ஓடிவந்த பொதுமக்கள், காரில் இருந்தவரை மீட்க முயற்சித்தனர்.

அப்போது காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்ததால், இதுகுறித்து சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குடிபோதையில் கார் ஓட்டி வந்த வாலிபரை பிடித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தியதில், சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சரோஜ்குமார் (27) என்பதும், தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், நேற்று முன்தினம் இரவு சரோஜ்குமார் வேலை முடிந்ததும், குடித்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சரோஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Tambaram – ,Velachery ,Avvai Nagar street ,Camp Road ,
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்