×

கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருவள்ளூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: நெல்லூர் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில்,கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை திருவள்ளூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் உள்ள, பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களில் 10 ஆயிரம் கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. எனவே தமிழகத்தில் ‘எச்5என்1’ என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அந்த மாவட்டங்களுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கோழிகள், காட்டு பறவைகள், அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பறவை காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல், தலைவலி, கைகால் தசைபிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறி. எனவே, கால்நடை துறையுடன் இணைந்து, பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வகை வைரசால் பாதிக்கப்படும் பறவைகள் மற்றும் மனிதர்கள் குறித்து தகவல், பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு சுகாதாரமாக இருத்தல், கை கழுவுதல், பாதிக்கப்பட்டவர்களிடருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

The post கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருவள்ளூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Public health department ,Tiruvallur ,CHENNAI ,Thiruvallur ,Livestock Department ,Nellore ,Andhra State ,Animal Husbandry Department ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல்...