×

பாஜ அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது: கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அரசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே வையிரவன்பட்டியில் திமுக மூத்த முன்னோடிகளை பாராட்டி கவுரவிக்கும்விதமாக பெண்கள் உள்ளிட்ட 1,500 நிர்வாகிகளுக்கு மாவட்ட திமுக சார்பில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,500 நிர்வாகிகளுக்கு பொற்கிழி மற்றும் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த ஒரு வருடத்தில் ரூ.42 கோடி திமுகவுக்காக உழைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தல் நமக்கு மிகவும் முக்கியம். 2019ல் எதிர்க்கட்சியாக இருந்து போட்டியிட்டு 39 இடங்களையும் கைப்பற்றினோம். அதேபோல உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்து வெற்றி பெற்றோம். கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற வேண்டும். பாஜ அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது. தமிழகத்தை மாற்றான் தாய் பிள்ளையாக பாஜ கருதுகிறது. மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் வழங்காமல் தமிழகத்திற்கு வஞ்சிக்கிறது. ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் வரி கட்டினால், 28 காசு மட்டுமே வழங்குகிறது. 2024ல் வல்லரசாக ஆக்குவோம் என்று சொல்லிவிட்டு, இப்பவும் அதையே சொல்லி வருகின்றனர்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அரசாக பாஜ செயல்படுகிறது. எந்த வளர்ச்சியும் இல்லை. மோடியின் நெருக்கமான நண்பரான அதானி 6 வருடங்களில் உலக பணக்காரர்கள் ஆனது மட்டுமே சாதனை. பொது சொத்துக்களை தாரை வார்த்து அதானி வளர்ச்சிக்கு மட்டுமே மோடி செய்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி உரிமைகளை கேட்காமல் அடிமையாக இருந்ததைப்போல திமுக இருக்காது. ஒன்றிய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் திமுக அடி பணியாது. எதையும் சந்திக்கும். முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மகளிர் இலவச பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து வந்து பார்த்து செல்லும் அளவு சிறப்பாக முதல்வர் ஆட்சி செய்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது: கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான அரசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : BJP government ,Udhayanidhi Stalin ,Minister of State ,DMK ,Vayiravanpatti ,Tiruputhur ,Sivagangai ,Minister ,Government Minister ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...