×

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டம் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 19 கி.மீ.க்கு 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஸ்ரீபெரும்புதூர்: சென்னை மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை 19 கிலோமீட்டர் தொலைவிற்கு 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம் அமைய உள்ளது என ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக சார்பில், 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு பாஜ அரசு இழைத்த அநீதிகளையும், அதிமுக அரசு செய்த துரோகங்களையும் நாட்டு மக்களுக்கு விளக்கிட, ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ மாபெரும் பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு குறு மற்றம் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். கழக தீர்மானக்குழு செயலாளர் மீ.அ.வைத்திலிங்கம், மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி எம்எல்ஏ, தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளர் காரப்பாக்கம் கணபதி எம்எல்ஏ, அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் அனைவரையும் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசுகையில் ‘‘தமிழகத்தில் இல்லம் தேடி மருத்துவ திட்டம் போல உலகிலேயே இல்லை. தமிழகத்தில் அறிவித்துள்ள, பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தக்கூடிய இல்லம் தேடி கல்வி திட்டம், விளையாட்டு திட்டம், பேராசிரியர் அன்பழகனின் கல்வி சார்ந்த கட்டிடங்கள் மேம்படுத்துவதற்கான திட்டம் மற்றும் மருத்துவத்துறையில் செயல்படுத்தக்கூடிய இன்னுயிர் காக்கும் திட்டம் மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை, அண்டை மாநிலங்களில் மக்களுக்கு வாக்குறுதிகளாக அரசியல் கட்சியினர் அளித்து வெற்றிபெற்று வருகின்றனர்.

சென்னை மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை 19 கிலோமீட்டர் தொலைவிற்கு 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம் அமைய உள்ளது. இந்த, மேம்பாலம் அமைப்பதன் மூலம் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு காலம் பிறக்கும். இந்திய வரலாற்றிலேயே 2019 மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெருமையை ஸ்ரீபெரும்புதூர் பெற்றுள்ளது” என்றார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்; ‘‘சென்ற தேர்தல் பிரசாரத்தில் இந்திய மக்களின் பணம் கருப்பு பணங்களாக வெளிநாட்டில் உள்ளது. கருப்பு பணங்களை கைப்பற்றி ஒவ்வொரு குடும்ப வங்கி கணக்குகளில் 15 லட்சம் செலுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது.

இதுவரை உங்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் வந்து சேர்ந்துள்ளதா என கேள்வி எழுப்பினர். மேலும், இந்தியாவில் உள்ள 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையம், கடலூர் என்எல்சி நிறுவனம், ரயில்வே போன்றவற்றில் தமிழக மக்கள் வேலை செய்து வருவதாக தெரியவில்லை. ஆனால், ஒன்றிய அரசு அறிவித்த வாக்குறுதிகளை, அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் நாங்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளோம்” என்றார்.

இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் மனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் செல்வராஜ், மதுரவாயல் தொகுதி பொறுப்பாளர் சேகர், ஆலந்தூர் பொறுப்பாளர் நரேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் உமாகாந்த், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், மாவட்ட நிர்வாகிகள் பொடவூர் ரவி, குண்ணம் முருகன், ஜார்ஜ், பேரூர் செயலாளர் சதிஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பாலா, சந்தவேலூர் சத்யா, ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி போஸ்கோ, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டம் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 19 கி.மீ.க்கு 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Minister ,M. Subramanian ,Sriperumbudur ,Chennai Maduravayal ,Stalin ,Voice public meeting ,Sriperumbudur Parliamentary Constituency ,to Restore ,M.Subramanian ,Dinakaran ,
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்