×

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தெலங்கானாவில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் அங்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டிய பீகாரைத் தவிர்த்து கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று தென்னிந்திய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துகின்றன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான காரணங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் மிகவும் அதிகமாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் 69சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகை 69 சதவீதத்திற்கும் அதிகம் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயமாகும்.

இவை தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள், சொந்த வீடு இல்லாத குடும்பங்கள், கல்வியறிவு பெற்ற குடும்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தமிழ்நாட்டில் துல்லியமாக இல்லை. இவற்றைத் துல்லியமாக திரட்டுவதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான் ஒரே தீர்வு ஆகும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிடுவதுடன், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தையும் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Assembly ,Ramadoss ,Tamil Nadu government ,CHENNAI ,Patali Makkal Party ,Congress government ,Telangana ,India ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு