×

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரி சேலம் உள்பட 4 மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்

*பெண்கள் உள்பட 2,700 பேர் கைது

சேலம் : ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க வேண்டும், வாகன விதிமீறல்களுக்கான ஆன்லைன் அபராதத்தை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ எல்பிஎப், சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எச்எம்எஸ் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர், நேற்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகர், மாவட்ட பகுதிகளில் மொத்தமுள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் நேற்று 5 ஆயிரம் ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த டிரைவர்கள், கோட்டை ஸ்டேட் பங்க் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 460 பேர் கைது செய்யப்பட்டு, அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

நாமக்கல்: நாமக்கல்லில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமையில், தொழிற்சங்க கூட்டமைப்பினர், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்ட 490 பெண்கள், 120 ஆண்கள் என மொத்தம் 610 பேர் கைது செய்யப்பட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர், அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். அதே போல், ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்த போலீசார், மாலையில் அவர்களை விடுவித்தனர். திருச்செங்கோட்டில் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 252 பேரை கைது செய்த போலீசார், மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை கைது செய்த போலீசார், மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

தர்மபுரி: ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தர்மபுரி தலைமை தபால் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 346 பெண்கள் உள்பட 568 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதே சமயம், ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின.

The post புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரி சேலம் உள்பட 4 மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Unions ,Salem ,Union Government ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் நாடா கட்டில் விற்பனை படுஜோர்