×

திருமங்கலம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை வாலிபர் உடல் 15 கிமீ இன்ஜினில் இழுத்துச் செல்லப்பட்ட பயங்கரம்

* நின்ற நிலையிலேயே சென்றதால் பரபரப்பு

* கள்ளிக்குடியில் ரயிலை நிறுத்தி உடல் மீட்பு

திருமங்கலம் : திருமங்கலம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த வாலிபரின் உடல் ரயில் இன்ஜினில் சிக்கி, சுமார் 15 கிமீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை மற்றும் விருதுநகரில் நின்று செல்லும். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி நிலையங்களில் நிற்பதில்லை.

இந்நிலையில், மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு புறப்பட்ட அந்தியோதயா ரயில் 8.15 மணியளவில் திருப்பரங்குன்றம் – திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதில், அவரது கழுத்துப்பகுதி இன்ஜினில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் நின்ற நிலையிலேயே அந்த வாலிபரின் உடல் இன்ஜினில் பயணித்தது.

திருமங்கலத்தை ரயில் கடந்தபோது, வாலிபர் உடல் இன்ஜினில் சிக்கியிருப்பதை ஸ்டேஷன் மாஸ்டர் பார்த்து ரயிலை நிறுத்த முயன்றார். அதற்குள் ரயில் திருமங்கலம் ஸ்டேஷனை கடந்து சென்றது. உடனடியாக, இதுகுறித்து கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கள்ளிக்குடிக்கு வந்த ரயிலை, ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் விருதுநகர் ரயில்வே போலீசார் நிறுத்தினர். அரை மணிநேர போராட்டத்திற்கு பின் வாலிபர் உடலை மீட்டனர். இடுப்புக்கு கீழே உள்ள உடல் பாகங்கள் சிதைந்து காணப்பட்டன.

சுமார் 15 கிமீ தூரம் நின்ற நிலையில் உடலுடன் ரயில் வந்துள்ளது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
விசாரணையில், தற்கொலை செய்தவர் திருமங்கலம், ஆறுமுகம் நகர் வடபகுதியைச் சேர்ந்த முருகன் (36) என தெரிந்தது. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, அடிக்கடி வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தொடர் உடல்நலம் பாதிப்பால் முருகன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். உடல் மீட்பு சம்பவத்தால், அந்தியோதயா ரயில் கள்ளிக்குடியில் இருந்து அரை மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

திரும்பி நின்றாரா?

பொதுவாக, ரயிலில் தற்கொலை செய்து கொள்பவர்கள் தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பது வழக்கம். ஒரு சிலர் ஓடும்போது பாய்வார்கள். தற்கொலை எண்ணத்துடன் வந்த முருகன், நேரடியாக ரயிலை பார்த்தால் மனது மாறி விடும் என்று பயந்து பின்புறமாக திரும்பி நின்றுள்ளார். இதனால் இன்ஜின் கம்பி அவரது கழுத்தில் சிக்கியதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

The post திருமங்கலம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை வாலிபர் உடல் 15 கிமீ இன்ஜினில் இழுத்துச் செல்லப்பட்ட பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Kallikkudi ,Thirumangalam ,Dinakaran ,
× RELATED தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு