×

தோடர் பழங்குடியின கிராமத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பழங்குடியின மக்களுடன் உற்சாக நடனம்

ஊட்டி : தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தனது மனைவியுடன் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஊட்டி வந்தார். ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள அவர், நேற்று காலை 11.15 மணியளவில் ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்து தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்றார். அங்கு ஆளுநர் மற்றும் அவரது மனைவிக்கு தோடர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய எம்ராய்டரி சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்குள்ள தோடர் பழங்குடியின மக்களின் குல தெய்வ கோயில்களான மூன்போ மற்றும் ஓடையாள் வாவ் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அவருக்கு தோடர் சமுதாயத்தை சேர்ந்த ஆல்வாஸ் தாங்கள் பாரம்பரியமாக கடைபிடிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கினர். பின்னர், ஆளுநர் முன்னிலையில் தோடர் பழங்குடியின இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி தங்களது உடல் வலிமையை காண்பித்தனர். அதன்பின், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கைவினை பொருட்களை பார்வையிட்டார்.
பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாரம்பரிய பழங்குடியின நடனத்தை ஆடினர். இதனை பார்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுடன் இணைந்து கை கோர்த்து உற்சாகமாக நடனமாடினார். பின்னர். அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

அப்போது ஆளுநர் ரவி பேசுகையில்,‘‘தோடர் பழங்குடியின மக்கள் நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை கைவிடாதது மகிழ்ச்சி. இது தான் இந்தியா. மக்கள் வளர்ச்சியடைந்தாலும் தங்களது அடிப்படையை விட்டு விடக்கூடாது. தோடர் பழங்குடியின வாழ்க்கை முறைகள் குறித்து தெரிந்து கொண்ட போது, இங்கு வர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனடிப்படையில் இங்கு வந்து உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் உபசரிப்பு மகிழ்ச்சியளித்தது. இதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

பின்னர், கல்லூரி மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். 12.25 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு ராஜ்பவன் சென்றடைந்தார். கவர்னர் வருகையை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா முதல் முத்தநாடுமந்து கிராமம் வரை மாவட்ட எஸ்பி சுந்தர வடிவேல் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊட்டியில் தங்கியுள்ள ஆளுநர் ஆர்என் ரவி, வரும் 18ம் தேதி காலை 11 மணியளவில் புறப்பட்டு கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

சொகுசு காரில் ஓய்வெடுத்த நாய்

ஊட்டியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது மனைவியுடன் நேற்று காலை முத்தநாடு மந்து பழங்குடி கிராமத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவர் வளர்க்கும் நாயையும் அழைத்து வந்திருந்தார். அவருடன் வந்திருந்த ஆளுநர் மாளிகை ஊழியர் நாயை கவனித்து வந்தார். நல்ல வெயில் அடித்த நிலையில் நாயை காரில் அமர வைத்தார். தொடர்ந்து சொகுசு கார் ஸ்டார்ட் செய்து ஏசி ஆன் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் ஏசி காரில் நாய் ஓய்வெடுத்தது. ஊழியர் காருக்கு வெளியில் இருந்து அதனை கண்காணித்த படியே இருந்தார்.

The post தோடர் பழங்குடியின கிராமத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பழங்குடியின மக்களுடன் உற்சாக நடனம் appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Todar ,Ooty ,Tamil Nadu ,Ooty Raj Bhavan ,Mantu ,
× RELATED படகு இல்லம் செல்லும் சாலையோர தடுப்பில் வர்ணம் பூசும் பணி தீவிரம்