×

ஏற்காடு, கருமந்துறை மலைப்பகுதிக்கு தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை

*சுற்றுலா வாகனங்களில் தொடர் சோதனை

*24 மணி நேரமும் கண்காணிப்பிற்கு ஏற்பாடு

சேலம் : ஏற்காடு, கருமந்துறை வனப்பகுதியில் காட்டுத்தீயை தடுக்க எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்காடு அடிவார சோதனைச்சாவடியில், சுற்றுலா பயணிகளின் வாகனங்களை போலீசார் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நடப்பாண்டு கோடை வெயில் வழக்கத்தை விட மிக அதிகளவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மார்ச் மாதம் தொடங்குவதற்கு முன்பே, தற்போது பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

வனப்பரப்பை பொருத்தளவில், இலையுதிர் காலம் என்பதால், கோடை வெயிலால் ஆங்காங்கே காட்டுத் தீ பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வனத்துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர் என 2 வனக்கோட்டங்கள் உள்ளன. இந்த வனக்கோட்டங்களில் சேர்வராயன் மலை, ஜருகுமலை. சூரியமலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை, கல்வராயன்மலை மற்றும் பல்வேறு சிறு குன்றுகள் இருக்கின்றன. இந்த வனத்தில் யானை, காட்டுமாடு, கரடி, புள்ளிமான், கடமான், முயல், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, குரங்கு, மலைப்பாம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் மற்றும் பல்வேறு பறவையினங்கள் வாழ்விடமாக வசித்து வருகின்றன.

கோடையில் வன விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக தீ தடுப்பு நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இந்தவகையில், சேலம் வனக்கோட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைத்தொடர், பாலமலை, பச்சமலை, சூரியமலை, கோதுமலைப்பகுதியிலும், ஆத்தூர் வனக்கோட்டத்தில் கல்வராயன் மலையிலும் தீ தடுப்பு பணியை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இம்மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும், காட்டிற்குள் கால்நடைகளை மேச்சலுக்கு கொண்டுச் செல்லக்கூடாது என்றும், விறகு பொறுக்க செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்தாண்டு ஏற்காடு மலை அடிவார பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து சாம்பலானது. அதனால், இவ்வாண்டு கோடை தொடங்கும் முன்பே ஏற்காடு மலையில் காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ஏற்காடு, கருமந்துறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். மேலும், இவ்விரண்டு இடங்களிலும் இருக்கும் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்காடு மலைப்பாதை அடிவாரத்தில் உள்ள காவல்துறை மற்றும் வனத்துறையினர் ேசாதனைச்சாவடியில் நேற்று முதல் எளிதில் தீ பற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வாகன சோதனை தொடங்கியது. சேலத்தில் இருந்து பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரையும் சோதனைச்சாவடியில் நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய், தீப்பெட்டி, ஸ்டவ் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லக்கூடாது எனக்கூறி தடுத்தனர். இதில், சுற்றுலா பயணிகள் சிலர், தீப்பெட்டி, சிகரெட் உள்ளிட்டவைகளை கொண்டு வந்திருந்தனர்.

அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மலைப்பாதையில் யாரேனும் நின்று சிகரெட் புகைக்கிறார்களா? என்பதை கண்டறிய வாகன ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். இந்த சோதனையை கோடைக்காலம் முடியும் வரை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளனர். இதேபோல், கருமந்துறை, டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 24 மணி நேர கண்காணிப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எளிதில் தீ பற்றும் பொருட்களை வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்வது குற்றம் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

The post ஏற்காடு, கருமந்துறை மலைப்பகுதிக்கு தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Karumantura hills ,Salem ,Karumanturai ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து