×

விருது பெற்ற கம்பம் கிளை நூலக கட்டிடம் சேதம்

*இடிந்துவிழும் முன் சீரமைக்க கோரிக்கை

கூடலூர் : சிதிலமடைந்து காணப்படும் விருது பெற்ற கம்பம் கிளை நூலக கட்டிடத்தை இடிந்து விழுவதற்கு முன் சீரமைக்க வேண்டும் என வாசகர்கள், போட்டித் தேர்வு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 1956ம் ஆண்டு கம்பம் கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இந்த நூலகம் சுமார் 40 ஆண்டுகள் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்தது. பின்னர் கம்பம் டி.எஸ்.காமாட்சி கவுடர் அரசு மருத்துவமனை பின்புறம் இருந்த 10 சென்ட் நிலத்தை நூலகம் கட்ட தானமாக வழங்கினார்.

இதையடுத்து கட்டிடம் கட்டப்பட்டு 1996ம் ஆண்டு முதல் சொந்த கட்டிடத்தில் கம்பம் கிளை நூலகம் செயல்படத் தொடங்கியது. தற்போது இந்த நூலகத்திற்கு 123-புரவலர்களும், 6400க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்டிருக்கும் இந்த நூலகத்தில் பாடநூல்கள், பொதுஅறிவு, போட்டித்தேர்வு, குடிமைப்பணி நூல்கள், அகராதி, கலைக்களஞ்சியம், வரலாற்று நாவல்கள், கதை, கவிதை என 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

இந்நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவும், கணிப்பொறி பிரிவும் உள்ளதோடு, தேனி மாவட்டத்தில் அரசின் போட்டி தேர்வுகளுக்கு வாசகர் வட்டத்தால் இலவச பயிற்சி அளிக்கும் மையமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. வாசகர் வட்டம் மூலம் மாதந்தோறும் பொதுமக்கள் மத்தியில் நூலகப் பயன்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள், கலந்துரையாடல், நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் புத்தக கண்காட்சி, நூலகங்களுக்கு தேவையான நன்கொடை பொருள்கள் பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த செயல்பாட்டுக்காக இக்கிளைநூலகம் தமிழக அரசின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்டு நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது.

இங்கு அரசின் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய கணிப்பொறியினை இலவசமாக பயன்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து கணினிகள் உள்ளது.இந்தப் பகுதி மக்களுக்கும், மாணவர்களுக்கும் முக்கியமானதாக உள்ள கம்பம் தெற்கு கிளை நூலகத்தின் கட்டிடம் கட்டி 28 ஆண்டுகள் ஆனதால் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரை வழியே மழைநீர் ஒழுகுகிறது.

இதனால் அரிய புத்தகங்கள் நனைந்து அழிந்துபோக வாய்ப்புகள் உள்ளது. மேற்கூரையின் ஒருபகுதி கீழே விழும் அபாய நிலையில் உள்ளதால் நூலக ஊழியர்கள் அப்பகுதிக்கு வாசகர்களை அனுமதிக்காமல் கயிறுகட்டி வைத்துள்ளனர். நூலகத்தின் கழிப்பறை மேற்கூரையும் கழிப்பறையும் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் நூலகத்திற்கும், அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிக்கு வரும் பெண்களும், மாணவ, மாணவிகளும் சிரமப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு தமிழக அரசு பொது நூலகத்துறையில் அனைத்து மாவட்டங்களிலும் நூலகங்களை மின்னணு சேவை நூலகங்களாக மாற்ற 500 நூலகங்களுக்கு அனுமதி வழங்கியது. அதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நூலகங்களில் மெய்நிகர் நூலகங்கள் (விர்ச்சுவல் லைப்ரரி) கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேனி மாவட்டத்தில் இவை இரண்டுக்கும் கம்பம் நூலகம் தகுதியாக இருந்த நேரத்தில், நூலகத்தின் அடிப்படை கட்டமைப்பு சரியில்லாமல் இருந்ததால் கம்பம் கிளை நூலகத்திற்கு கிடைக்கவில்லை.

நூலக கட்டிடம் சேதமடைந்து உள்ளதால், இந்த ஆண்டு அரசின் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு வாசகர் வட்டத்தால் இலவச பயிற்சி அளிக்க முடியாததால், பயிற்சி நடத்த புரவலர்களிடம் இடம் கேட்டுள்ளனர். எனவே இடிந்துவிழும் நிலையில் உள்ள கம்பம் கிளை நூலக கட்டிடத்தை சீரமைத்து பொலிவுபடுத்தவும், மாணவர்களும் போட்டி தேர்வாளர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த நூலகத்தை முழுநேர நூலகமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாசகர்வட்டம் சார்பில் மாவட்ட நிர்வாக்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வாசகர்கள் வட்ட தலைவர் கவிஞர் பாரதன் கூறுகையில், “ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள கம்பம் நகரில் பொது மக்களுக்கு பயனுள்ளதாக விளங்கும் இந்த கிளை நூலகத்தின் கட்டிடம் 28 ஆண்டுகள் பழமையானது என்பதால் மேற்கூரையும், கழிப்பறையும் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

அதுபோல் போதுமான நேர வசதியில்லாததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள், போட்டித் தேர்வாளர்கள், அதிக நேரம் நூலகத்தைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே தேனி மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி, இந்த நூலகத்தின் இடிந்த கட்டிடத்தை சீரமைப்பு செய்து வாசகர்கள் அச்சமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும், மேலும் இக்கிளை நூலகத்தினை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் முழு நேர நூலகமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

The post விருது பெற்ற கம்பம் கிளை நூலக கட்டிடம் சேதம் appeared first on Dinakaran.

Tags : Kambam Branch Library ,Gudalur ,Kampam branch library ,Kampam ,Theni district ,Dinakaran ,
× RELATED கூடலூரில் தண்ணீர் தேடி...