×

நீலகிரியில் மழை அளவை துல்லியமாக கண்காணிக்க 30 இடங்களில் தானியங்கி மழை மானிகள் அமைக்கும் பணி

*கலெக்டர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மழை அளவை துல்லியமாக கண்காணிக்கும் வகையில் 30 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும், அக்டோபர் இரண்டாவது வாரம் அல்லது இறுதியில் இருந்து டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இரு பருவமழைகளின் போது நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு, சாலைகளின் குறுக்கே மரம், பாறைகள் விழுந்து சாலைகள் துண்டிப்பு, வீடுகள் இடிதல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம்.

குறிப்பாக வடகிழக்கு பருவமழையின் போது இயற்கை பேரிடர்கள் அதிகளவு ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் பெரும் பொருட்சேதமும் ஏற்படுகின்றன. முக்கிய சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்புகள் கடுமையாக ஏற்படுகின்றன. நீலகிரியில் பருவமழை சமயங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மழை அளவினை துல்லியமாக கண்காணிப்பதற்காகவும், அதிகமான மழை பெய்யும் சமயங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், உயிரிழப்பு மற்றும் பொருட்சேதத்தை தவிர்க்கவும் அல்லது குறைக்கவும் தமிழக அரசால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தானியங்கி மழைமானிகளை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை 30 இடங்களில் தானியங்கி மழைமானிகளை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோத்தகிரி வட்டத்தில் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தானியங்கி மழைமானி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் அருணா ஆய்வு செய்தார்.

மேலும் அரசின் உத்தரவு படி இம்மாவட்டத்தில் உள்ள மற்ற 29 இடங்களிலும் படிப்படியாக தானியங்கி மழை மானிகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் அருணா தெரிவித்தார்.

The post நீலகிரியில் மழை அளவை துல்லியமாக கண்காணிக்க 30 இடங்களில் தானியங்கி மழை மானிகள் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Neelgiri district ,Nilgiri district ,South- ,Nilagiri ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பீன்ஸ்...