×

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அம்பேத்கர் படைப்புகளை மொழிபெயர்த்து மலிவு விலையில் வெளியிட திட்டம்

சென்னை: அம்பேத்கர் படைப்பாக்கங்களை மொத்தமாக திரட்டி 1979ல் மகாராஷ்டிர அரசு ஆங்கிலத்தில் 37 தொகுதிகளாக வெளியிட்டது. இதை தமிழ்நாட்டின் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தமிழாக்கம் செய்து வெளியிட்டது.எனினும் அந்நூல்கள் முழுமையான மொழிபெயர்ப்பாக அமையவில்லை என்பதை கருத்திற்கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு, அம்பேத்கரின் அனைத்து படைப்பாக்கங்களையும் இக்கால சூழலுக்கு ஏற்ப பொருள்வாரியான தலைப்பில் எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிட அறிவுறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

‘அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள்’ எனும் புதிய தலைப்பில் 60 தொகுதிகளாக தமிழ் வளர்ச்சித் துறையோடு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து வெளியிட முனைந்துள்ளன. இதை செயல்படுத்த சூலூர் பாவேந்தர் பேரவை தலைவர் புலவர் செந்தலை ந.கவுதமன், எழுத்தாளர், ஆய்வாளர் பேராசிரியர் வீ.அரசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் மு.வளர்மதி, கல்லூரி கல்வி இயக்ககத்தின் முன்னாள் துணை இயக்குநர் அ.மதிவாணன், சண்முகம் சரவணன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் முதல் கூட்டம் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அவ்வை அருள் தலைமையில் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் 9.2.2024 அன்று நடந்தது.  அண்ணல் அம்பேத்கர் கருத்துகளை எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்வது, இக்கால சூழ்நிலைக்கு ஏற்ப மொழிவளத்தை அமைத்தல், பிறமொழிக் கலப்பினை அகற்றுதல், உலக மக்களிடம் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதியும் 300 பக்கங்கள் வரை கொண்டதாக அமைக்கப்பட்டு, அடக்க விலையை விடக் குறைவான விலையாக தொகுதி ஒன்றுக்கு ரூ.100க்கு மிகாமல் விற்பனை செய்யலாம் எனவும் குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அம்பேத்கர் படைப்புகளை மொழிபெயர்த்து மலிவு விலையில் வெளியிட திட்டம் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Tamil Development Department ,CHENNAI ,Maharashtra Government ,New Century Book Company of Tamil Nadu ,Government of Tamil Nadu ,
× RELATED “என் தற்கொலைக்கு குடும்பத்தினரே...