×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி ஒரேநாளில் 7 வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி: தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி ஒரேநாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி நேற்று அதிகாலை தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு வாகன மண்டபத்தில் ஊர்வலமாக 7 குதிரைகளுடன் கூடிய சூரிய பிரபை வாகனத்தை அருணன் தேர் ஓட்டியாக வர, மலையப்ப சுவாமி சிவப்பு மாலையும், பட்டு வஸ்திரமும் உடுத்தி தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து சூரிய பிரபை வாகனத்தில் 4 மாடவீதிகளில் பவனி வந்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். மாடவீதியில் பவனி வந்த மலையப்ப சுவாமி வடமேற்கு மாடவீதியில் வந்தபோது சூரிய உதயத்திற்காக சிறிது நேரம் காத்திருந்தார். காலை 6.50 மணிக்கு சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது விழுந்த பின்னர் சூரியனுக்கும், மலையப்ப சுவாமிக்கும் சிறப்பு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் ஊர்வலமாக வாகன மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளினார். அதனைதொடர்ந்து காலை 9 மணியளவில் சின்ன சேஷ வாகனம், 11 மணியளவில் கருட வாகனம், 1 மணியளவில் அனுமந்த வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு பிறகு ஏழுமலையான் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். அதை தொடர்ந்து கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், இரவு சந்திர பிரபை வாகனத்தில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டு தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி ஒரேநாளில் 7 வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி: தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடல் appeared first on Dinakaran.

Tags : Ratha ,Tirupati Esumalayan Temple ,Malayappa Swamy ,Theerthawari ,Tirumala ,Ratha Saptami ,Tirupati Eyumalayan Temple ,Malayappa Swami ,Mata Road ,Tirthavari ,Saptami ,Tirupati Echumalayan Temple ,
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...