×

வாலட், பாஸ்டேக் உள்ளிட்டபே-டிஎம் சேவைகளைப் பயன்படுத்த மேலும் 15 நாள் அவகாசம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி உத்தரவு

மும்பை: பே-டிஎம் பேமண்ட் வங்கி, வாலட், பாஸ்டேக் சேவைகளை பயன்படுத்துவதற்கான அவகாசத்தை மார்ச் 15ம் தேதி நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பேமண்ட் வங்கி விதிகளை பின்பற்றாததால், பே-டிஎம் பேமண்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து 2 வாரங்கள் முன்பு உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை மார்ச் 1ம் தேதி அமலுக்கு வருவதாக அப்போது அறிவித்திருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பே-டிஎம் பாஸ்டேக் மற்றும், பேமண்ட் வங்கிச் சேவைகளை பிப்ரவரி 29ம் தேதி வரை மட்டுமே பெற முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் இந்த சேவைகளை பெறுவதற்கான அவகாசத்தை மார்ச் 15ம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.

பே-டிஎம் வாலட்டில் பணம் போட்டு வைத்திருப்பவர்கள், இருப்பு உள்ள வரை பரிவர்த்தனை செய்யலாம்; பில் தொகைகளை செலுத்தலாம். அல்லது இருப்பு தொகையை தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். இதுபோல் பே-டிஎம் மூலம் ஏசிஎம்சி எனப்படும் பொது பயண அட்டை பயன்படுத்துவோரும் தங்கள் இருப்பு தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக டாப் அப் செய்ய முடியாது. வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு ஏதுவாகவும் பேடிஎம் பேமெண்ட் வங்கி, வாலட், பாஸ்டேக் சேவைகளை மார்ச் 15ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வாகனங்களுக்கான பாஸ்டேக் எடுக்கும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து பேடிஎம் பேமெண்ட் வங்கியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவன லிமிடெட் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், இடையூறு இல்லாத பயணத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட 32 வங்கிகளில் உங்களது பாஸ்ட்டேக்கை வாங்கவும்’’ என்று குறிப்பிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில், ஏர்டெல் பேமெண்ட் வங்கி, அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் பரோடா, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஐடிபிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி, யெஸ் வங்கி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. தடை செய்யப்பட்டுள்ள பேடிஎம் பேமெண்ட் வங்கியில், 8கோடிக்கும் அதிகமான பாஸ்டேக் பயனர்கள் இருக்கின்றனர். இது 30 சதவீத சந்தை பங்கை கொண்டுள்ளதாகவும் இந்திய நெடுஞ்சாலைகள் ஆணைய மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

The post வாலட், பாஸ்டேக் உள்ளிட்டபே-டிஎம் சேவைகளைப் பயன்படுத்த மேலும் 15 நாள் அவகாசம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : RBI ,MUMBAI ,Dinakaran ,
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...