×

வியாசர்பாடியில் பரபரப்பு 250 சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் லாரியை திருடிய 5 பேர் கும்பல் கைது: தப்பிய கூட்டாளிக்கு வலை

பெரம்பூர்: வியாசர்பாடியில் லாரியை திருடி விற்ற 5 பேர் கும்பலை, 250 சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். தப்பிய கூட்டாளியை தேடி வருகின்றனர்.சென்னை வியாசர்பாடி பள்ளத்தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (34). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். தனது லாரியை அம்பேத்கர் கல்லூரி சாலை அருகில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு 9 மணிக்கு லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இதுகுறித்து எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் வர்கீஸ் தலைமையிலான போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

அப்போது லாரி மூலக்கடை வழியாக செங்குன்றம் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஒவ்வொரு சிசிடிவி காட்சிகளாக பார்த்து லாரி சென்ற இடங்களை கண்காணித்தபோது, ஆந்திர மாநிலம் தடா வரை லாரி சென்றது தெரியவந்தது. பின்னர், அம்பேத்கர் கல்லூரி சிக்னல் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் தடா வரை 250 கேமராக்களை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட இடத்தில் லாரி நின்று மீண்டும் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களை வைத்து காரனோடை அம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த அகஸ்டின் என்ற எபின் இன்பராஜ் (51) என்பவரை பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அகஸ்டின், அம்பேத்கர் கல்லூரி சாலை பகுதியில் நின்றிருந்த பார்த்தசாரதிக்கு சொந்தமான லாரியை திருடி தனக்கு ஏற்கனவே சிறையில் பழக்கமான தூத்துக்குடியை சேர்ந்த புரோக்கர் பாரதிராஜா என்பவருக்கு தொலைபேசி மூலம் லாரியை விற்று தருமாறு கூறியுள்ளார். பாரதிராஜா அவருக்கு நன்கு பழக்கமான ஆலபாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரை தொடர்பு கொண்டு லாரியை விற்று தருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து விஜயகுமார் திருச்சியை சேர்ந்த முகமதுபூட்டோவிடம் லாரியை கொண்டு போய் கொடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மற்றொரு புரோக்கரான சுரேஷ் ராஜன் மற்றும் அகஸ்டின் இருவரும் சேர்ந்து திருடிய லாரியை கடந்த 9ம் தேதி சோழபுரத்தில் இருந்து திருச்சி கொண்டு போய் முகமது பூட்டோவிடம் லாரியை ஒப்படைத்துள்ளனர். 2 லட்ச ரூபாய் விலை பேசி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வந்ததாக அகஸ்டின் தெரிவித்துள்ளார். அகஸ்டின் கொடுத்த தகவலின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாரதிராஜா (35), சைதாப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (35), திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் ராஜன் (58), திருச்சி ஆழ்வார்நகர் பகுதியை சேர்ந்த முகமது பூட்டோ (36) ஆகிய 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, திருடப்பட்ட லாரியை முகமது பூட்டோ தென்காசியை சேர்ந்த ஒருவருக்கு விற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எம்கேவி நகர் போலீசார் தென்காசி பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும் தப்பிய விஜயகுமாரையும் போலீசார் தேடிவருகின்றனர். 250 சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் லாரியை திருடி சென்ற கும்பலை போலீசார் பிடித்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வியாசர்பாடியில் பரபரப்பு 250 சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் லாரியை திருடிய 5 பேர் கும்பல் கைது: தப்பிய கூட்டாளிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Viasarpadi ,PERAMPUR ,VYASARBADI ,Parthasarathi ,Viasarpadi Valley ,Chennai ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு