×

புதுச்சேரி கடற்கரையில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி காரைக்காலில் மீட்பு: பெண் உட்பட 4 பேர் கைது

காரைக்கால்: புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ஒவ்வொரு பகுதியாக சென்று பலூன், பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி விஜயலட்சுமி, 4 வயது மகள் சனல்யாவுடன் புதுச்சேரி கடற்கரைக்கு வியாபாரத்துக்காக சென்றார். அன்றிரவு 7 மணியளவில் சிறுமி சனல்யா தனியாக விளையாடி கொண்டிருந்தார். அப்போது சிறுமியை மர்மநபர்கள் சிலர் சனல்யாவை கடத்தி சென்றுள்ளனர்.

மகளை காணாமல் அதிர்ச்சியடைந்து பல இடங்களில் பெற்றோர் தேடினர். பின்னர் பெரியக்கடை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், கடற்கரைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது 3 பேர் காசு தருவதாக கூறி முன்னால் வேகமாக நடந்து செல்லும் நிலையில் சிறுமி சனல்யா காசு கேட்டவாறு பின்தொடர்ந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து சிறுமியை கடத்தி சென்ற 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், காரைக்காலுக்கு குழந்தை கடத்தி செல்லப்பட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

ஒரு கேமராவில் பதிவான காட்சியில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த பஸ்சிலிருந்து ஒரு பெண்ணும், ஒரு ஆணும் சிறுமியுடன் இறங்கி ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோ பதிவெண் நம்பரை வைத்து டிரைவரை பிடித்து அந்த பெண்ணின் இருப்பிடத்தை போலீசார் நேற்று மாலை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பெண் இருந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது கடத்தி வரப்பட்ட சிறுமி சனல்யாவும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டதுடன் பெண் மற்றும் அவருடன் இருந்த ஆண் நபரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக புதுச்சேரியில் 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இதற்கிடையே முத்துப்பாண்டியை காரைக்காலுக்கு வரவழைத்து அவரது மகன் சனல்யாவை ஒப்படைத்தனர். சிறுமியை விற்பதற்காக கடத்தினரா, இவர்கள் குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா என்று கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி கடற்கரையில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி காரைக்காலில் மீட்பு: பெண் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry beach ,Karaikal ,Muthuppandi ,Puducherry ,Lospettai ,Vijayalakshmi ,Sanalya ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...