×

தபால் பெண் ஊழியரிடம் சங்கிலி பறிப்பு

ராசிபுரம், பிப்.16: ராசிபுரம் அருகே பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தபால் பெண் ஊழியரிடம், பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகள் பிரியதர்ஷினி(21). இவர், ராசிபுரம் தபால் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று பணி முடிந்ததும், டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ராசிபுரம் கிழக்கு தெரு அருகே சென்றபோது, ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த 2 வாலிபர்கள், திடீரென பிரியதர்ஷினி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி, அந்த வாலிபர்களை தனது டூவீலரில் பின் தொடர்ந்து சென்றார். ஆனால், அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், ராசிபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அப்பகுதியில் வீடு, கடைகளில் பொருத்தி உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தபால் பெண் ஊழியரிடம் சங்கிலி பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chain ,Rasipuram ,Thiruvalluvar ,Namakkal district ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து