×

விடுதலை புலிகளிடம் இருந்து நிதி பெற்ற விவகாரம் நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் 1,500 வீடியோக்களை ஒப்படைத்தார்: 2வது முறையாக என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 2022 மே மாதம் வாகன சோதனையில், வெடி பொருட்கள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு இருந்து வந்ததும், தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுதப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)க்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்கு பதிந்து 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த கபிலன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் நாதக கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபரான சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறையை சேர்ந்த நாதக தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார்(33), மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன்(40), மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப்(25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பொறியாளர் பாலாஜி(33) ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைதொடர்ந்து என்ஐஏ அளித்த சம்மனை ஏற்று கடந்த 7ம் தேதி சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். சாட்டை துரைமுருகனிடம், என்ஐஏ அதிகாரிகள் அவர் நடத்தும் யூடியூப் சேனல்கள் மூலம் வெளியான வீடியோக்களை அளிக்க உத்தரவிட்டனர். அதன்படி அவர் புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். பின்னர் அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது யூடியூப் சேனல்கள் மூலம் வெளியான 1,500 வீடியோக்கள் அடங்கிய ஹார்டிஸ்கில் உள்ள அனைத்து வீடியோக்களையும் பதிவு செய்து கொண்டனர்.

அதைதொடர்ந்து எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பினர். வெளியே வந்த சாட்டை துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், என 2 யூடியூப் சேனல்களில் இதுவரை பதிவு செய்த 1,500 வீடியோக்களை ஒப்படைத்தேன். ஜெர்மனில் இருந்து ஒரு நபர் அடிக்கடி பேசியது குறித்து என்ஐஏ அதிகாரிகள் கேட்டனர். அவர் யார் என்று எங்களுக்கு தெரியாது. வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாழ்த்து சொல்வதற்கு தொலைபேசியில் பேசி வருகிறார்கள். என்ஐஏ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.

The post விடுதலை புலிகளிடம் இருந்து நிதி பெற்ற விவகாரம் நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் 1,500 வீடியோக்களை ஒப்படைத்தார்: 2வது முறையாக என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : LTTE ,NIA ,Chattay Duraimurugan ,Chennai ,Sanjay Prakash ,Naveen Chakraborty ,Omalur ,Salem district ,India ,Nathaka ,Chatti Duraimurugan ,
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....