×

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல் தகுதியை வேட்புமனுவில் கேட்க முடியுமா? தேர்தல் ஆணையம் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடமையாற்றுவதற்கான உடற் தகுதியை பெற்றிருக்கிறாரா என்று கேட்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்வதோடு, 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் 2016ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பதால், அந்த விவரங்களை கேட்க முடியாது. இது சம்பந்தமாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால் அதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.
மனுதாரரின் வழக்கறிஞர் புருஷோத்தமன், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. மருத்துவ காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில் வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக் கூடாது என்று வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள், வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது. அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள் உடற்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியுள்ளது என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடமையாற்றுவதற்கான உடற்தகுதியைப் பெற்றிருக்கிறார்களா என்பது குறித்த சான்றை பெறலாம். உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல் தகுதியை வேட்புமனுவில் கேட்க முடியுமா? தேர்தல் ஆணையம் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,CHENNAI ,CHENNAI HIGH COURT ,COMMISSION ,Dinakaran ,
× RELATED சென்னை உள்ளிட்ட இடங்களில்...