×

ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் காங்கிரஸ் சார்பில் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆலப்புழாவில் முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து இளைஞர் காங்கிரசார் கருப்புக்கொடி காண்பித்தனர். அப்போது முதல்வர் பினராயி விஜயனின் மெய்க்காப்பாளர்கள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை லத்தியால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் காயமடைந்தனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் கொடுத்த போதிலும் போலீசார் முதலில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து பினராயி விஜயனின் மெய்க்காப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் உடனடியாக வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜயனின் மெய்க்காப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் இதுவரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில் நேற்று கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக சபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஷாபி கூறினார். ஆனால் இந்த சம்பவம் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது என்றும், சமீபத்தில் நடந்த சம்பவமல்ல என்றும் கூறி சபாநாயகர் ஷம்சீர் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுத்தார். இதைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். தொடர்ந்து சபையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

The post ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala Assembly ,Thiruvananthapuram ,Congress ,Question Hour ,Youth Congress ,Chief Minister ,Pinarayi Vijayan ,Alappuzha ,Pinarayi ,Kerala ,
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு