×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் கூடுதல் எண்ணிக்கையில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் 67,275 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களில் 25,293 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ஒரேநாளில் ரூ.3.07 கோடியை பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். இன்று காலை நிலவரப்படி நேர ஒதுக்கீடு டிக்கெட் இல்லாமல் வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இன்று திருமலையில் ரதசப்தமி உற்சவம் நடைபெற உள்ளது. ஆண்டு பிரமோற்சவத்தில் 9 நாட்கள் நடைபெறும் வாகனங்களில் 7 வாகன உற்சவம் இன்று காலை முதல் இரவு வரை நடக்கிறது. இந்த வாகனங்களில் ஏழுமலையான் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி நடைபெறும். இது மினி பிரமோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. இதைக்காண ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Eyumalayan temple ,Tirumala ,Swami ,
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி