×

வேலூர் கிருபானந்த வாரியார் சாலை நடைபாதையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்: 2வது நாளாக தூய்மை பணியை மேயர் ஆய்வு

வேலூர்: வேலூர் கிருபானந்த வாரியார் சாலை நடைபாதையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் இன்று அதிரடியாக அகற்றப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக தூய்மை பணியை மேயர் சுஜாதா ஆய்வு செய்தார். வேலூர் மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் மெகா தூய்மைப்பணிகளை மேற்கொள்ள கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி இப்பணி நேற்று தொடங்கி இன்று 2 நாளாக நடந்தது.

இந்நிலையில் 2வது நாளான இன்று வேலூர் மண்டி வீதி, கிருபானந்தவாரியார் சாலை, சுண்ணாம்புக்கார வீதிகளில் மேயர் சுஜாதா தலைமையில் 2வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், உதவி கமிஷனர் செல்வபாலாஜி, சுகாதார அலுவலர் லூர்துசாமி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுகிருபானந்த வாரியார் சாலை நடைபாதை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பழக்கடைகள், காய்கறி கடைகள் வைத்திருந்தனர். இதை உடனடியாக அகற்ற மேயர் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகளை அகற்றினர். மேலும் அவர்களுக்கு அபாரதம் விதித்தனர்.

நேற்று தூய்மைப்படுத்திய பகுதியிலேயே இன்று மீண்டும் குப்பை கொட்டப்பட்டு இருந்தது. இதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மாநகராட்சி ஊழியர்கள், குப்பைகளை அகற்றிய சிறிது நேரத்தில் நியூ சிட்டிங் பஜாரில் உள்ள ஸ்வீட் கடையைச் சேர்ந்த ஊழியர்கள் தங்கள் கடையில் அகற்றிய குப்பையை அந்த இடத்தில் கொட்டினர். இதை கண்ட மேயர் உடனடியாக அந்த கடையின் ஊழியர்களை வரவழைத்து அந்த குப்பைகளை அவர்களையே அகற்ற செய்தார். மேலும் அந்த கடைக்கு ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சாலையில் அழுகிய காய்கறிகள், பழங்கள் கொட்டியிருந்ததால் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து மாநகராட்சி லாரி மூலம் தண்ணீர் கொண்டு அந்த சாலை முழுவதும் தூய்மைப்படுத்தினர். இனி இங்கு இதுபோல் குப்பைகளை கொட்டக்கூடாது. மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே தரம் பிரித்து குப்பைகளை வழங்க வேண்டும் என்று வியாபாரிகளிடம் மேயர் அறிவுறுத்தினார்.

மீறி குப்பைகளை கொட்டினால் முதலில் ₹500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதேபோல் செய்தால் ₹1,000 அல்லது அதற்கு மேல் விதிக்கப்படும் என்றார்.

மண்டி தெருவில் மீண்டும் பஸ் போக்குவரத்து
இதுகுறித்து மேயர் சுஜாதா கூறியதாவது: வேலூர் மைய பகுதி போக்குவரத்து மிகுந்த இடமாக உள்ளது. மண்டி தெருவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மண்டி தெரு, லாங்கு பஜார் முழுவதுமாகவே ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே மண்டி தெருவில் உள்ள சென்டர் மீடியனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

மீண்டும் மண்டி தெரு வழியாக பஸ் போக்குவரத்து ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் குப்பைகளை இன்று இரவு முதல் கடைகளை மூடும் முன்பு குப்பைகளை தரம் பிரித்து கடை முன்பு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிவிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post வேலூர் கிருபானந்த வாரியார் சாலை நடைபாதையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்: 2வது நாளாக தூய்மை பணியை மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kirupananda Warriar ,Vellore ,Mayor ,Sujata ,Kiribananda Warriar ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...