×

முட்டுக்காடு அருகே விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்

மாமல்லபுரம்: சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் ஒருவரின் பல்வேறு உடல் உறுப்புகள் நல்ல நிலையில் இயங்கி கொண்டிருந்தால், அந்த உடல் உறுப்புகள் அனைத்தும் தனித்தனியே தேவைப்படும் பிறருக்கு தானமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் இறந்துபோன ஒரு நபர் 20க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளை சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தானமாக வழங்கி பிறரை வாழவைக்கலாம்.

இந்நிலையில், மாமல்லபுரம் அருகே மீனவர் குப்பம், கருங்குழி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்துரு (33). திருமணமாகவில்லை. இவர், கடந்த 13ம் தேதி இரவு மாமல்லபுரத்தில் இருந்து இசிஆர் சாலை வழியே சென்னை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவரது பைக், முட்டுக்காடு அருகே சாலையோரத்தில் பழுதாகி நின்றிருந்த ஒரு கார்மீது மோதியது. இதில் சந்துரு தூக்கி வீசப்பட்டு இசிஆர் சாலை நடுவே விழுந்துள்ளார். அவ்வழியே வேகமாக சென்ற மற்றொரு கார் சந்துருமீது ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்னிற நேற்றிரவு சந்துரு பரிதாபமாக பலியானார். மகன் இறந்த துக்கத்திலும், அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர். இதன்படி, சந்துருவின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை சந்துருவின் உடல் போலீஸ் பாதுகாப்போடு ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரத்துக்கு வந்து சேர்ந்தது. மாமல்லபுரத்தில் உடலுறுப்புகளை தானமாக வழங்கி சந்துருவின் உடலுக்கு இன்று மதியம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செங்கல்பட்டு சார்ஆட்சியர் நாராயணா சர்மா அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, இன்று மாலை அரசு மரியாதையுடன் சந்துருவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

The post முட்டுக்காடு அருகே விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Muttukadu ,Mamallapuram ,Chennai ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...