×

ஏன் எதற்கு எப்படி…?

?மூன்று தலைமுறைக்கு மேல் ஒரே வீட்டில் குடியிருக்கலாமா?
– ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

குடியிருக்கலாம். ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் தலைவாசல்காலை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும். அறுபது ஆண்டு என்பது காலச்சக்கரத்தின் ஒரு முழுமையான சுழற்சியை உணர்த்தும். 60 நொடி ஒரு நிமிடம், 60 நிமிடம் ஒரு மணி, 60 நாழிகை ஒரு நாள் என்பது போல, 60 ஆண்டுகள் என்பது ஒரு முழுமையான சுழற்சியைக் குறிக்கும். 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவாசல்படியை புதிதாக மாற்றுவதோடு, குறைந்தது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுண்ணாம்பு அடித்தல், உட்பட பராமரிப்பு பணியும் ஆண்டிற்கு ஒருமுறை கணபதிஹோமம் போன்ற பூஜைகளையும் மேற்கொண்டு வரும் பட்சத்தில், மூன்று தலைமுறைக்கு மேலும் அந்த வீட்டில் தாராளமாக குடியிருக்கலாம்

?பிறவிக்கடனை தீர்க்க வழி என்ன?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

என் கடன், பணி செய்து கிடப்பதே என்கிறார் திருநாவுக்கரசர். அவர் சொல்வதும் பிறவிக்கடனைத் தீர்க்கின்ற வழிதானே. ஆலயங்களில் உழவாரப்பணி செய்து வந்ததை அவர் தனது கூற்றினில் வெளிப்படுத்தினார். நாம் நம்முடைய பிறவிக்கடனைத் தீர்க்க வேண்டும் என்று சொன்னால், முதலில் நமக்குரிய கடமைகளை சரிவரச் செய்து முடிக்க வேண்டும். பெற்ற பிள்ளைகளுக்கு திருமண வாழ்வினை ஏற்படுத்திக்கொடுத்த பின்பு, வாழ்க்கைத்துணையுடன் இணைந்து இறைபணியில் ஈடுபட வேண்டும். தன்னலம் கருதாது தர்ம காரியங்களில் நேரத்தினை செலவிட வேண்டும். தம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்திடல் வேண்டும். எவன் ஒருவன் தன்னலம் கருதாது அடுத்தவர்களுக்கு உதவி செய்து வாழ்வதில் இன்பம் காண்கிறானோ, அவனே பிறவிக்கடனைத் தீர்க்கிறான். அப்பர்பெருமான் காட்டிய வழியில், என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருப்பவர்கள் நிச்சயமாக தங்களுடைய பிறவிப்பயனைஅடைந்துவிடுவார்கள்.

?ஒருவர் இறந்துவிட்டால், பூஜை அறையில் ஒரு வருடத்திற்கு சாம்பிராணி போடக்கூடாது என்கிறார்களே, அது எதனால்?
– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

அவ்வாறு சொல்வது முற்றிலும் தவறு. வீட்டில் எவரேனும் இறந்துவிட்டால் அவரது கருமகாரியம் நடந்து முடியும் வரை மட்டுமே பூஜை அறையில் விளக்கேற்றுவதோ அல்லது ஊதுவத்தி, சாம்பிராணி புகை போடுவதோ கூடாது. கருமகாரியம் முடிந்த பிறகு தாராளமாக பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதோடு, நித்யபடி பூஜையையும் செய்து வரலாம். பூஜையின்போது சாம்பிராணி புகையும் போடலாம். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

?நலமுடன் வாழ தினமும் என்ன செய்யலாம்?
– ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி.

தினமும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்து வந்தாலே நலமுடன் வாழலாம். அதிகாலை சூரியனின் ஒளி நம் மீது படும்போது வைட்டமின்-டி என்பது உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்யம் பெறுகிறது. மனமும் தெளிவாக வேலை செய்கிறது. இதைத்தான் சாஸ்திரம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள்.

?ஆலயத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் வெளியில் இருந்து ஒரு சிலர் இறைவனை வணங்குகிறார்களே, இது சரியா?
– வண்ணை கணேசன், சென்னை.

சரியே. மரக்கதவுகள் மூடப்பட்டாலும் மனக்கதவுகள் திறந்துதானே இருக்கிறது. மூலவரின் உருவத்தை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி வணங்குகிறார்கள். இதில் தவறு காண என்ன இருக்கிறது? அதே நேரத்தில், இன்னும் சற்று நேரத்தில் ஆலயத்தின் கதவுகள் திறக்கப்படும், நமக்கும் அவசரம் ஏதுமில்லை எனும்போது காத்திருந்து இறைவனை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

?நெய் தீபம், எண்ணெய் தீபம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
– என். இளங்கோவன், மயிலாடுதுறை.

இறைவனுக்கு தீபம் ஏற்றும்போது நெய் தீபம் என்பது சிறப்பு பெறுகிறது. “சாஜ்யம் த்ரிவர்த்தி சம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயா, க்ருஹான மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம்’’ என்கிறது வேத மந்திரம். “சாஜ்யம்’’ என்றால் நெய்யைக் கொண்டு என்று பொருள். நெய்யைக் கொண்டுதான் இறைவனுக்கு விளக்கேற்றி காண்பிக்க வேண்டும் என்று சாஸ்திரம் அடித்துச் சொல்கிறது. கண்டிப் பாக அது பசுநெய்யாகத்தான் இருக்க வேண்டும். இது விளக்கேற்றுவதற்கு மட்டும் என்று இருப்பது நெய்யே அல்ல. அது நெய் போன்ற ஏதோ ஒரு கலப்படமான பொருள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக இதுபோன்ற கலப்படங்களைக் கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் எதிர்மறையான பலன்தான் கிடைக்கும். சுத்தமான பசுநெய் வாங்குவதற்கு வசதி இல்லாதவர்கள், நல்லெண்ணெய் என்று அழைக்கப்படும் எள்ளு தானியத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான நல்லெண்ணெயைக் கொண்டு தீபம் ஏற்றி வழிபடலாம். இதற்கும் பலன் என்பது உண்டு. மற்றபடி கலப்படமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயைக் கொண்டு விளக்கேற்றுவதால், எந்த பயனும் இல்லை என்பதோடு, அதிலிருந்து வெளிப்படும் புகை, நம் ஆரோக்யத்தை சீர்குலைக்கும் என்பதையும் உணரவேண்டும்.

?எந்த விரலில் மோதிரம் அணிவது அதிர்ஷ்டமானது?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மோதிரம் அணிந்தால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று சாஸ்திரம் கூறவில்லை. அது அவரவர்கள் நம்பிக்கையைப் பொறுத்தது. அதே நேரத்தில், அதிர்ஷ்டத்தைப் பற்றி எண்ணாமல் ஆபரணமாக மோதிரம் அணியும்போது, மோதிரவிரல் என்றழைக்கப்படும் சுண்டுவிரலுக்கு அருகில் உள்ள விரலில் அணிய வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதனால்தான் சுண்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே உள்ள அந்த விரல் மோதிரவிரல் என்றே அழைக்கப்படுகிறது.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி…? appeared first on Dinakaran.

Tags : J. Manikandan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்