×

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் எனவும் சபதம் ஏற்றிடுவோம்: டிடிவி தினகரன் அறிக்கை!

சென்னை: ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகளை தமிழகத்தில் நிலைநாட்ட எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி வெற்றிக்கொடி ஏற்றிட சபதமேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்; தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயமாய் திகழ்ந்து பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் குணநலன்களை குவியப் பெற்ற ஒரே தலைவர், ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் நம் எம்.ஜி.ஆர். கடமை தவறா பண்பு, தத்துவத் தெளிவு, தடம் மாறா மன உறுதி, அடிமட்ட தொண்டனையும் சமமாக பாவிக்கும் பெருந்தன்மை கொண்ட எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அரசியல் எதிரிகளால் பல்வேறு சோதனைகளையும், சூழச்சிகளையும், சதிகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு ‘பீனிக்ஸ் பறவை’ போல மீண்டெழுத்தவர் நம் ஜெயலலிதா.

“தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம்; தமிழக மக்களின் வளர்ச்சியும் வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள்” எனக்கூறி, தன் இறுதி மூச்சு வரை மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர் செயயலலிதா. ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகம், பள்ளி மாணவர்கள் மேற்படிப்பில் சிறந்து விளங்க விலையில்லா மடிக்கணினி மற்றும் விலையில்லா மதிவண்டி வழங்கும் திட்டம், சொந்த நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்காக விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம் என எண்ணிலடங்கா நாடு போற்றும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

மகளிருக்கென தனி காவல் நிலையங்கள், மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், அம்மா மகப்பேறு திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு என பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஜெயலலிதா தீட்டிய திட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. கருணையின் வடிவமாய் திகழும் அன்னை தெரசா அவர்களே ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்து பாராட்டும் அளவுக்கு புகழ்பெற்றதாக அத்திட்டங்கள் விளங்கின. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி மாநிலத்தில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதையே தனது எண்ணமாக கொண்டிருந்த ஜெயலலிதா, குடிசையில்லா தமிழகம், உலகத்தரத்தில் கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய தொலைநோக்கு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியதோடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.

தொடர் சட்டப் போராட்டங்களின் மூலம் தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்த பெருமையும் ஜெயலலிதா அவர்களையே சாரும். தளராத தன்னம்பிக்கை, நிகரில்லா அரசியல் ஆளுமை, அசாத்திய ஆற்றல் என பன்முகத்தன்மை கொண்ட ஜெயலலிதா, தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்குவதற்காக எண்ணற்ற தொலைநோக்கு சிந்தனை கொண்ட திட்டங்களை அமல்படுத்தினார். சிங்கம் கர்ஜிப்பதை நிறுத்தினால் நரியும் நாட்டாமைத் தனம் செய்யும் என்பதை போல ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிகாரத்தில் அமரவைக்கப்பட்ட சில சுயநல நரிகள், தொலைநோக்குத் திட்டங்களைக் கிடப்பில் போட்டு, செயலிழக்கச் செய்து அம்மா அவர்களுக்கு மட்டுமல்லாது அவர் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்த கோடிக்கணக்கான தமிழக மக்களுக்கும் துரோகம் செய்ததன் விளைவாக ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த ஆட்சியும் பறிபோனது.

“நம் லட்சியம் உயர்வானது; நமது பார்வை தெளிவானது; நமது வெற்றி முடிவானது” என்ற அம்மா அவர்களின் தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப எதிரிகள் மற்றும் துரோகிகளின் சூழ்ச்சிகளை இத்தருணத்தில் நாம் துணிச்சலுடன் முறியடிப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முத்திரை பதித்து ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நாம் தான் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லும் வகையில், பிப்ரவரி 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் தேனி மாவட்டம், தேனி நகரம் பங்களாமேட்டில் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக இதயதெய்வம் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்” நடைபெற உள்ளது.

ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் இப்பொதுக்கூட்டத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம். இதனைத் தொடர்ந்து மக்கள் சந்திப்பும், களப்பணியுமே வெற்றிக்கான தீர்வு என்பதை உணர்ந்து நாமும், நமது இயக்கமும் கொண்டிருக்கும் கொள்கைகளை தெருமுனைக் கூட்டங்கள் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து, தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் நிலைநாட்டிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முத்திரை பதிப்பதோடு, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் எனவும் சபதம் ஏற்றிடுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் எனவும் சபதம் ஏற்றிடுவோம்: டிடிவி தினகரன் அறிக்கை! appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Tamil Nadu ,DTV ,CHENNAI ,AAMUK ,General ,Dhinakaran ,Dinakaran ,
× RELATED மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்