×

ஒரே நாடு, ஒரே தேர்தல்; தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பேரவையில் 2 தனி தீர்மானம் நிறைவேறியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்; அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள ‘தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்’, ‘ஒரே நாடு – ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு’ ஆகிய 2 தீர்மானங்களை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்மொழிந்தார். இந்த தீர்மானங்கள், அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறின. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்ற வாதத்தை ஒன்றிய அரசு முன் வைக்கிறது. ஆனால், கூடுதல் செலவாகும் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனாலும் ஒன்றிய அரசு எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் செயல்பட்டு அதை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அனைத்துக்கட்சி மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். இந்த குழு நடவடிக்கை ஒரு கண்துடைப்பு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று, ஒன்றிய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள ‘தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்’ மற்றும் ‘ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற நடைமுறையை எதிர்ப்பது’ தொடர்பாக 2 அரசினர் தனித் தீர்மானங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து, முன்மொழிந்து பேசியதாவது: நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் இரண்டு மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒன்று, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற மிக மோசமான எதேச்சாதிகார எண்ணம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டு, ‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு’ என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும்.

இவை இரண்டுமே மக்களாட்சியை குலைக்கும் செயல்கள் என்பதால் இவை இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேரக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது எத்தகைய ஆபத்தானது என்பதை விளக்க விரும்புகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ‘சுதந்திரமான, நேர்மையான’ தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது.

ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவார்களா? சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவார்களா?

இதைவிட காமெடிக் கொள்கை இருக்க முடியுமா? நாடாளுமன்ற, சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? நாடாளுமன்ற தேர்தலை கூட, ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்துவதற்கு தயாராக இல்லாத சூழல்தான் இப்போது இருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 30 மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா? நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே இவற்றுக்கும் சட்டமன்றம், நாடாளுமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்ட விரோதமானது.

உள்ளாட்சி தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்போவதாக சொல்வது மாநில உரிமைகளை பறிப்பதாகும். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் அரசியல் சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்பட உள்ள நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு யாரும் பலியாகிவிடக் கூடாது. எனவே நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

இரண்டாவதாக, தொகுதி மறுவரையறை குறித்த ஆபத்துகளை விளக்க விரும்புகிறேன். தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்ககூடிய ஆபத்து, சூழ்ச்சி இருக்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தமிழ்நாட்டின் மீது, தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது. அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இந்திய அரசமைப்பின் 82 மற்றும் 170ம் பிரிவுகளின்படி, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகும், நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்படுகின்றன. எல்லை நிர்ணய சட்டத்தின்படி இவை செய்யப்படுகிறது. இந்த சட்டத்தின்படி எல்லை நிர்ணய ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்து வருகிறது. மக்கள் தொகை குறையும் மாநிலங்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்து விடும். பிற மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகமாகும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனை நாம் எதிர்த்தாக வேண்டும். மக்கள்தொகை குறைவதால் ஜனநாயக உரிமைகள் மாநிலங்களுக்கு குறையக் கூடாது என்பதால்தான் அரசியலமைப்பில் 42வது சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு வரை, தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதுபோலவே, அரசியலமைப்பு சட்டத்தின் 84வது திருத்தமும் செய்யப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கும். மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டிலும், நிதி பகிர்விலும் காட்டப்படுகிறது. மக்கள்தொகையை காரணமாக காட்டி தென்னிந்திய மாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்கு குறைந்துவிட்டது. இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு.

மக்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் என்று கணக்கிடப்பட்டு, மாநிலங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டால் புவியியல், மொழி, பொருளாதார, அரசியல் பின்னணிகளை புறந்தள்ளும் செயலாகிவிடும். மக்களாட்சியின் ஆதார பண்பையே அது நாசமாக்கிவிடும். இதனால் ஏற்கனவே கனல் வீசிக்கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வுகளை மேலும் வளர்ப்பது போலாகிவிடும். இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் செயல் எதையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கூடாது. அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவது கூட்டரசின் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகிவிடும். 2026க்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும்.

தவிர்க்க இயலாத காரணங்களால் மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்பொழுது மாநில சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்த சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, வி.சி.க., மார்க்சிய கம்யூ., இந்திய கம்யூ, மதிமுக, மமக, கொமதேக, தமிழர் வாழ்வுரிமை கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து பேசினர். அதன்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 2 தனித்தீர்மானமும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

* தமிழ்நாடு உரிமையை இழக்கும் அபாயம்
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் உரிமைக்காக இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து விடும். 39 எம்.பி.க்கள் இருக்கும்போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம். இதிலும் குறைந்தால் என்ன ஆகும்? தமிழ்நாடு, கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும். அதன் சக்தியை இழக்கும். அதனால் அதன் உரிமைகளை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின்தங்கி விடும். எனவேதான் தொகுதி வரையறை – மறுசீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்த சூழலிலும் குறைக்கக் கூடாது என்கிறோம். மக்கள்தொகை குறைந்து விட்டதை காரணம் காட்டி, தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை குறைப்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை பலவீனம் அடையச் செய்யும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளும் வரை, தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படியே தொடரச் செய்வதே சரியாகும்.

* ‘அன்றும்… இன்றும்…’ காத்திருக்கும் ஆபத்து
1971ம் ஆண்டு தமிழ்நாடும், பீகாரும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள்தொகையை கொண்டிருந்ததால் மக்களவையில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான தொகுதிகளை கொண்டிருந்தன. இன்று தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் பீகாரின் மக்கள்தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை பல வடமாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாச்சாரத்தில் குறைந்து விடும். இதனை நினைத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.

* மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு தண்டனையா?
இதுவரை 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் எல்லை நிர்ணய ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 1976ம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பிறகும், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவை இடங்கள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன. இவ்வாறு மறுநிர்ணயம் செய்யும்போது, மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவைகளின் இடங்கள் குறைக்கப்படுகின்றன. அதாவது ‘மக்கள்தொகை கட்டுப்பாடு’ எனும் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி, மக்கள்தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது. இதனால் மக்கள்தொகை குறையும். மாநிலங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். மக்கள்தொகை கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசைப் பெறும். அவற்றுக்கான பிரதிநிதித்துவம் அதிகமாகும்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல்; தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பேரவையில் 2 தனி தீர்மானம் நிறைவேறியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்; அனைத்து கட்சி தலைவர்களும் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Mu. K. Stalin ,Chennai ,Tamil Nadu Legislature ,K. Stalin ,M. K. ,Stalin ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...