×

இழப்பீடு வழங்காத பேருந்துகள் ஜப்தி கடலூர் நீதிமன்றம் அதிரடி

கடலூர்: விருதாச்சலம் அருகே விபத்தில் படுகாயம் அடைந்த பேராசிரியருக்கு இழப்பீடு வழங்காத பேருந்து கடலூர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது. விருதாச்சலம் அருகே உள்ள கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (37 ). தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 21/4/ 2016 ஆம் ஆண்டில் பெண்ணாடத்தில் இருந்து விருதாச்சலம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது பேருந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பேராசிரியர் தமிழ்ச்செல்வன் படுகாயம் அடைந்தார் .பேராசிரியர் தமிழ்ச்செல்வன் தரப்பில் இழப்பீடு கோரி கடலூர் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சிவமணி ,சரவணன், முகுந்தன், சத்யா மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கடலூர் நீதிமன்றம் இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட்டது .ஆனால் உரிய இழப்பீடு வழங்காத நிலையில் இழப்பீடு தொகை ரூபாய் 4,20,770 வழங்க மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது .ஆனால் தொடர்ந்து இழப்பீடு தொகை வழங்கப்படவில்ல .இதை அடுத்து மனுவை விசாரித்த நீதிபதி அன்வர் சதாத் இழப்பீடு வழங்காத பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் கடலூர் பேருந்து நிலையத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து ஜப்தி செய்யப்பட்டு கடலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது.

* மற்றொரு பேருந்தும் ஜப்தி:

காட்டுமன்னார்கோயில் தாலுகா குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தவல்லி( 33) கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 8/1/2019 அன்று சோழதரம் சென்ற பேருந்தில் பயணம் செய்தார் .அப்போது பூச்சிக் குடிகாடு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது ஏற்பட்ட விபத்தில் சிவானந்தவல்லி எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதைத்தொடர்ந்து இழப்பீடு கோரி கடலூர் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் சிவமணி மற்றும் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் பெண் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நிலையில் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூபாய் 2 ,85,297ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி அன்வர் சதாத் உத்தரவிட்ட நிலையில் தொடர்ந்து இழப்பீடு தொகை வழங்காததால் சம்பந்தப்பட்ட பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார் .இதைத்தொடர்ந்து கடலூர் நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு கடலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது.

The post இழப்பீடு வழங்காத பேருந்துகள் ஜப்தி கடலூர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Cuddalore court ,Cuddalore ,Vrudhachalam ,Tamilchelvan ,Kotteri ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...