×

இந்தியா-இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் நாளை ராஜ்கோட்டில் தொடக்கம்: அறிமுக வீரராக களம் இறங்கும் சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல்

ராஜ்கோட்: இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றன. இதனால் 1-1 என தொடர் சமனில் உள்ள நிலையில் 3வது டெஸ்ட் குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று முன்தினம் ராஜ்கோட் வந்து சேர்ந்த நிலையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி தொடரில் இருந்து குடும்ப விஷயமாக விலகி விட்ட நிலையில், மிடில் ஆர்டர் தடுமாற்றமாக உள்ளது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ஒரு இரட்டை சதம், ஒரு அரைசதத்துடன் 321 ரன் எடுத்து பார்மில் உள்ளார். தொடர்ந்து சொதப்பி வந்த சுப்மன்கில், 2வதுடெஸ்ட்டில் 2வது இன்னிங்சில் சதம் விளாசி கவனம் ஈர்த்தார். கேப்டன் ரோகித்சர்மா 4 இன்னிங்சில் 90 ரன்களே எடுத்துள்ள நிலையில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கே.எல்.ராகுல் காயத்தால் விலகிய நிலையில் அறிமுக வீரராக சர்ப்ராஸ்கான் இடம்பெறுகிறார். ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தால் தொடரில் இருந்து விலகியதால், ரஜத் படிதார் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வார். மேலும் விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் பேட்டிங்கில் தடுமாறுவதால் துருவ் ஜூரல் அறிமுக வீரராக களம் இறங்குகிறார்.
பவுலிங்கில் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார். அவர் 15 விக்கெட் எடுத்து முதலிடத்தில் உள்ளார். ஸ்பின்னர்களுக்கு சாதகமாக உள்ள ஆடுகளங்களிலும் அவரின் பந்துவீச்சு மிரட்டலாக உள்ளது.

நம்பர் 1 இடத்தில் உள்ள அவர் யார்க்கர் வீசி போல்ட் எடுப்பது தனித்துவமாக இருக்கிறது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், ஓய்வுக்கு பின் அணிக்கு திரும்பி இருப்பதால் முகேஷ் குமாருக்கு பதிலாக ஆடும் லெவனில் இடம் பிடிக்கிறார். இதேபோல் ஆல்ரவுண்டர் ஜடேஜா காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் குல்தீப் யாதவ் நீக்கப்படுகிறார். அனுபவம் இல்லாத மிடில் ஆர்டராக இருந்த போதிலும் சொந்த மண்ணில் இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி முன்னிலை பெறும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது. மறுபுறம் அதிரடியாக ஆடும் பாஸ்பால் யுத்தியுடன் இங்கிலாந்து அணியும் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய ஒல்லி போப் 243, ஜாக் கிராலி 200 ரன் எடுத்துள்ளனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 132, டக்கெட் 131ரன்அடித்துள்ளனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோரூட் 52, பேர்ஸ்டோ 98 ரன்களே எடுத்துள்ளதால் இந்த டெஸ்ட்டில் திறமையை வெளிபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் டாம் ஹார்ட்லி14 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ரெஹான் அகமது விசா பிரச்னையில் சிக்கி இருக்கும் நிலையில் 2 வேகம், 2 சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. இதனால் ஆண்டர்சனுடன் , மார்க்வுட் மற்றும் சுழலில் டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர் களம் இறங்குவர். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இருக்காது. இதுவரை….இரு அணிகளும் நாளை 134வது முறையாக டெஸ்ட்டில் நேருக்கு நேர் களம் இறங்குகின்றன. இதற்கு முன் ஆடி உள்ள 133 டெஸ்ட்டில் இங்கிலாந்து 51, இந்தியா 32ல் வென்றுள்ளன. 50 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.

 

The post இந்தியா-இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் நாளை ராஜ்கோட்டில் தொடக்கம்: அறிமுக வீரராக களம் இறங்கும் சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல் appeared first on Dinakaran.

Tags : India ,England ,Test ,Rajkot ,Sarpras Khan ,Dhruv Jural ,Hyderabad ,Visakhapatnam ,Gujarat State ,Dinakaran ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது