×

மாநிலங்களவை எம்.பி.யாகிறார் சோனியா ராஜஸ்தானில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

புதுடெல்லி: மாநிலங்களவை எம்பியாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக அவர், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் சில மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. சில கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. ஆனால் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்படாமல் இருந்தது. இன்றுதான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இது தொடர்பாக கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில், ராஜஸ்தானில் சோனியா காந்தி, பீகாரில் டாக்டர் அகிலேஷ் பிரசாத் சிங், இமாச்சலில் அபிஷேக் மனு சிங்வி, மகாராஷ்டிரா மாநிலத்தில் சந்திரகாந்த் ஹண்டோர் ஆகியோர் போட்டியிடுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் வந்தார். பின்னர் அங்குள்ள சட்டசபை வளாகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சோனியா காந்தி, கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சில மாதங்களிலேயே அவர், கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவரது மகன் ராகுல் காந்தி புதிய தலைவராக பதவியேற்றார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். தொடர்ந்து கடந்த 2019, ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக அவர் பதவியேற்றார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே கடந்த 1999ம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் சோனியா காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். பின்னர் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு மாறினார். கடந்த மக்களவை தேர்தலிலும் ரேபரேலி தொகுதி வெற்றி பெற்றார். எனினும் வரும் மக்களவை தேர்தலில் சோனியா காந்தி ரேபரேலியில் போட்டியிட மாட்டார். ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. அவர், 5 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். சோனியா காந்தி, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளதால் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. மற்றொரு பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி, ஸ்மிரிதி இரானியால் தோற்கடிக்கப்பட்டார். அவர் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் தற்போது எம்பியாக உள்ளார். இம்முறை அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுவது சந்தேகம் எனவும், வயநாடு தொகுதியில்தான் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

 

The post மாநிலங்களவை எம்.பி.யாகிறார் சோனியா ராஜஸ்தானில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் appeared first on Dinakaran.

Tags : M. B. Yakrar Sonia ,Rajasthan ,New Delhi ,Sonia Gandhi ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மையம்...