×

தமிழக கோவில்களும் வழிபாடு முறைகளும்!!!

இரண்டு தேர் திருவிழாக்கள்

திருச்சியிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் மதுரை செல்லும் சாலையில் இருக்கிறது விராலிமலை. இங்குள்ள சண்முகர் முருகன் கோயிலில், வருடத்திற்கு இரண்டு தேர் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இது வேறு எந்த முருகன் ஆலயத்திலும் நடைபெறாத ஒன்றாகும். இங்கு தைப்பூசத்தன்றும், வைகாசி விசாகத்தை முன்னிட்டும் நடக்கும் விழாவிலும் தேரோட்டம் நடக்கிறது.
இங்கு குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ ‘குழந்தை மாற்றுதல்’ என்ற விசேஷ சடங்கு நடத்தப்படுகிறது.

முருகன் என்னும் பண்டிதர்

அக்காலத்தில் தமிழறிஞர்களை பண்டிதர் என்பர். பண்டிதர் என்றால் அறிவு ஞானத்தில் சிறந்தவர் என்று அர்த்தம். முற்றும் அறிந்த ஞானம் இறைவனுக்கு மட்டுமே உண்டு. எனவேதான் முருகப் பெருமானை ‘ஞான பண்டிதன்’ என்பர். இவர் பழநியில் வீற்றிருக்கிறார். திருப்புகழில் அருணகிரிநாதர் ஞான பண்டித சுவாமி நமோ நம! என்று போற்றிப் பாடியுள்ளார். அவரை வழிபட்டோருக்கு ஞானம் உண்டாகும்.

ஐந்து அஸ்காரம்

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம்செங்கோட்டை வழியில் உள்ளது இலஞ்சிகுமாரர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் போது முதல் நாள் பிரம்மாவாக, இரண்டாம் விஷ்ணுவாக, மூன்றாக நாள் சிவனாக, நான்காம் நாள் மகேஸ்வரனாக, ஐந்தாம் நாள் சதாசிவனாக முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலிப்பார்.

முருகனுக்கு அன்னாபிஷேகம்

திருப்போரூர் கந்தசாமி கோயில் முருகன் சுயம்பு மூர்த்தம். முருகனின் 300 திருநாமங்கள் பொறிக்கப்பட்ட சுப்பிரமணியர் யந்திரம் சிதம்பர சுவாமிகள் எனும் மகானால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த யந்திரத்துக்கு பிரதான பூஜை செய்யப்படுகிறது. இத்தலத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப் பெருமான் அருள்கிறார். ஐப்பசி பௌர்ணமியன்று இத்தல கந்தசாமிக்கு அன்று அன்னாபிஷேகம் நடத்துகிறார்கள்.

சத்தியப் படிக்கட்டுகள்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செங்கோட்டு வேலவர் தன் கையில் சேவலை ஏந்தியபடி தரிசனம் தருகிறார். கோயில் படிக்கட்டு அருகில் 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை உள்ளது. இங்குள்ள 60 படிக்கட்டுகளை ‘சத்தியப் படிக்கட்டுகள்’ என்பர். பல வழக்குகள் இந்தப் படிக்கட்டில் தீர்க்கப்படுகின்றன. ராகு தோஷம் கால சர்ப்பதோஷம், களத்திர தோஷம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்து பலன் பெறுகின்றனர்.

மயில் மேல் முருகன்

எண்கண் திருத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் முன்புறம் மூன்று பின்புறம் மூன்று முகங்கள். பன்னிரு திருக்கரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவற்கொடி, அங்குசம் தாங்கியுள்ளார். இவரது கரங்களில் உள்ள விரல்கள்கூட தனித்தனியே இடைவெளியுடன் உள்ளது. மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஆறுமுகப் பெருமான் காட்சித் தருகிறார். இவரது முழு எடையையும் மயிலின் இருகால்களே தாங்குகின்றன.

ராதாகிருஷ்ணன்

The post தமிழக கோவில்களும் வழிபாடு முறைகளும்!!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Trichy ,Viralimalai ,Madurai ,Shanmugar Murugan Temple ,Murugan ,Thaipusam ,
× RELATED அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல்...