×

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒன்றிய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து, மீண்டும் போராட்டம் நடத்த 1 லட்சம் விவசாயிகள் திரண்டு வந்ததால் தலைநகர் டெல்லி குலுங்கியது. தடைகளை மீறி வர முயன்ற விவசாயிகள் மீது டிரோன் மூலம் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியதால் டெல்லி எல்லை பகுதிகள் போர்க்களமாக மாறின.

பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில எல்லைகளில் போலீசாரும் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது இன்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்படுவதால் பஞ்சாப் – அரியானா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு எதிராக கொடூரமான அடக்குமுறையை ஒன்றிய அரசு ஏவுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசை எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல; கோரிக்கையை வலியுறுத்தவே போராட்டம். அமைதியாக போராட்டம் நடத்தச் செல்லும் விவசாயிகள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்துவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு விவசாய சங்கங்களுக்கு அமைச்சர் முண்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Delhi ,Dinakaran ,
× RELATED அரசு துறைகளையும் காவிமயமாக்குவதா?: தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம்