×

புனித வெள்ளி நோன்பு துவக்கம் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வியாபாரிகள் வருகை குறைவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தைக்கு, புனித வெள்ளி நோன்பு கடைபிடிப்பால் கேரள வியாபாரிகள் வருகை குறைந்து நேற்று விற்பனை மந்தமானது. பெரும்பாலான மாடுகள் குறைவான விலைக்கு விற்பனையானது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் ஒரு பகுதியில் அமைந்துள்ள மாட்டு சந்தைக பிரசித்தி பெற்றது. இந்த சந்தை செவ்வாய், வியாழக்கிழமைகளில் நடக்கும். அப்போது சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர்.

இதில் கடந்த ஆண்டில் டிசம்பர் மூன்றாவது வாரத்திலிருந்து மாடு வரத்து அதிகமாக இருந்தது. அப்போது சுமார் 2500 முதல் 3000 மாடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. அச்சமயத்தில் கேரள வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்ததால் விற்பனையும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடந்த சந்தை நாளில் வழக்கத்தை விட மாடு வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. சுமார் 1000க்கும் குறைவான மாடுகளே சந்தைக்கு வரப்பெற்றது. மேலும், வரும் மார்ச் 29ம் தேதி புனித வெள்ளியையொட்டி, கடந்த 10ம் தேதி முதுல் கிறிஸ்துவர்கள் நோன்பு கடைபிடிப்பு துவங்கியுள்ளதால், கேரள வியாபாரிகள் வருகை குறைந்து, விற்பனை மந்தமானது. இதனால் உள்ளூர் பகுதி வியாபாரிகளே, மாடுகளை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர்.

இதில் காளை மாடு ரூ.36ஆயிரத்துக்கும், பசுமாடு ரூ.33 ஆயிரத்துக்கும், எறுமைமாடு ரூ.35 ஆயிரத்துக்கும் என கடந்த வாரத்தைவிட சராசரியாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரை வரை என குறைவான விலைக்கு விற்பனையானது. இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சந்தைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை மாடு வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது புனித வெள்ளி நோன்பு கடைபிடிப்பால், வெளியூர்களில் இருந்து மாடுகள் வரத்து குறைந்ததுடன்.

கேரளா வியாபாரிகள் மாடுகளை வாங்க வருவது குறைவால் விற்பனை மந்தமானது. புனித வெள்ளி நோன்பு முடிவு வரை விற்பனையும் மந்தமாக இருக்கும். இதனால் சுற்றுவட்டார பகுதியிலிருந்து சந்தை நாளில் கொண்டுவரப்படும் மாடுகளை குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post புனித வெள்ளி நோன்பு துவக்கம் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வியாபாரிகள் வருகை குறைவு appeared first on Dinakaran.

Tags : Good Friday ,Pollachi ,Kerala ,Pollachi market ,Gandhi Market ,Pollachi, Coimbatore ,Pollachi Cattle Market ,Dinakaran ,
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...