×

தீபாவளி சீட்டு நடத்தியவர் ₹13 லட்சம் ஏப்பம் ஏமாந்தவர்கள் டார்ச்சரால் பணம் வசூலித்த வாலிபர் திடீர் தற்கொலை

*சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

இடைப்பாடி : இடைப்பாடி அருகே பலகார சீட்டு நடத்தியவர் பணம் தர மறுத்ததால், பணம் கட்டியவர்கள் வசூலித்தவருக்கு கெடுபிடி கொடுத்தனர். இதனால், வாலிபர் தூக்கிட்டு தற்கொலை‌ செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே தேவூர் அடுத்த கத்தேரி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). இவர் அப்பகுதியில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்தார். சீட்டு தொகையை வசூலித்து தர சாமியம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த தனபால் (39) என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். பழனிசாமியிடம் சீட்டு கட்டி வந்தவர்களிடம் தனபால் பணம் வசூலித்து வந்தார்.

கடந்த தீபாவளிக்கு ₹13 லட்சம் சீட்டு பணத்தை பழனிசாமி சீட்டு போட்டவர்களுக்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், சீட்டு போட்டவர்கள் தனபால் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பிக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் தனபால் நான் சீட்டு நடத்தவில்லை, பழனிச்சாமி தான் சீட்டு நடத்துகிறார், நான் அவரிடம் கேட்டு வாங்கி தருகிறேன் எனக்கூறி, பழனிச்சாமியிடம் பணத்தை கேட்டு வந்துள்ளார். அவரும் தருகிறேன் எனக்கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். சீட்டு போட்டவர்கள் தொடர்ந்து நச்சரித்ததால், தனபால் தன்னிடம் இருந்த வீட்டுப் பத்திரம், நகை, பைக் உள்ளிட்டவைகளை அடமானம் வைத்து அவர்களுக்கு பணத்தை கொடுத்துள்ளார். அவ்வாறு கொடுத்தும் சிலருக்கு பணத்தை தர முடியாமல் சிரமத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சீட்டு பணத்தை தருவதாக கூறி பழனிசாமி ஏமாற்றியதால், மன வேதனையில் இருந்த தனபால் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை‌ செய்து கொண்டார். தகவலறிந்த தேவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, எஸ்ஐ ராஜேந்திரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் திரண்ட தனபாலின் மனைவி மற்றும் உறவினர்கள், பழனிசாமியை கைது செய்ய வேண்டும் எனக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், தனபாலின் சடலத்தை வாங்காமல் உறவினர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், தனபாலை தற்கொலைக்குத் தூண்டியதாக பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது அக்கா காந்திமதி(55), அவரது கணவர் முனியப்பன்(60), மகள் சங்கீதா மற்றும் உறவினர் செல்லமுத்து உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட தனபாலுக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், 10 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். பணம் கட்டியவர்கள் கொடுத்த நெருக்கடியால் பணம் வசூலித்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post தீபாவளி சீட்டு நடத்தியவர் ₹13 லட்சம் ஏப்பம் ஏமாந்தவர்கள் டார்ச்சரால் பணம் வசூலித்த வாலிபர் திடீர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Ethapadi ,Balakar ,Dinakaran ,
× RELATED இடைப்பாடி அருகே சுட்டெரிக்கும் வெயிலுக்கு 10 ஆயிரம் வாழை கருகியது