×

அண்ணா விளையாட்டரங்கில் வீணாக கிடக்கும் ₹1.25 கோடி உயர் கோபுர விளக்குகள்

நாகர்கோவில் : நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் ரூ. 1.25 கோடியில் வாங்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடிய தரம் கொண்ட உயர் கோபுர மின்விளக்குகள் ஒரு ஓரமாக வீணாகி கிடக்கின்றன.நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் தினசரி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், விளையாட்டு அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் சார்பில், பகல் மற்றும் மின்னொளி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இங்கு மைதானம் முழுவதும் இரவிலும் வெளிச்சம் பெறும் வகையில், கிரிக்கெட் ஸ்டேடியங்களில் பயன்படுத்தப்படும் 4 பக்கவாட்டு உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்த ரூ.1.25 கோடியை முன்னாள் ராஜ்ய சபா எம்.பி விஜயகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கியிருந்தார். ஆனால், இதற்கு மின்கட்டணம் அதிகம் ஆகும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் இந்த விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றி பொருத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்படி உயர் மின்கோபுரங்கள் மற்றும் விளக்குகள் அண்ணா விளையாட்டரங்கிற்கு வந்து விட்ட பின்னரும், அவற்றை பொருத்தாமல் வீணாக ஒரு ஓரத்தில் போட்டு வைத்துள்ளனர். இதனால், மின்கோபுரங்கள் மற்றும் விளக்குகள் என மொத்த நிதியும் வீணாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் 26 கண்காணிப்பு கேமராக்கள் விளையாட்டு மைதானம் மற்றும் அதன் வாயில் பகுதிகளில் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்து விட்டாலும், இதுவரை அந்த கேமராக்களும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

இது குறித்து, அண்ணா விளையாட்டரங்க நலச்சங்க தலைவர் ஜெயின் ஷாஜி கூறியதாவது: அண்ணா விளையாட்டரங்கில் இரவிலும் பயிற்சி மேற்கொள்ளும் வகையில், 4 உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்த முன்னாள் எம்.பி விஜயகுமார் நிதி ஒதுக்கி அதற்கான மின்விளக்கு கம்பங்கள் விளையாட்டரங்கிற்கு வந்து விட்டன. ஆனால், இதனை பொருத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதில், ஒப்பந்தத்தை திருத்தி, முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பிற்கு பதிலாக தரம் குறைந்த விளக்குகளை கொள்முதல் செய்துள்ளதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பு கேமராக்களையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கூறினார்.

கிரிக்கெட் ஸ்டேடிய தர விளக்குகள்

முன்னாள் எம்.பி விஜயகுமார் கூறியதாவது: அண்ணா விளையாட்டரங்கில் வளர்ச்சி பணிகள் நடைபெறவேண்டும். இரவிலும், பயிற்சி பெறும் வகையில், கிரிக்கெட் ஸ்டேடியங்களில் பொருத்தப்படும் விளக்குகள் போன்று 4 திசைகளிலும் பொருத்த முதலில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹98 லட்சம் ஒதுக்கினேன். பின்னர் காலதாமதம் காரணமாக கூடுதலாக ரூ.32 லட்சம் ஒதுக்கினேன். வெளிச்சம் குறைந்த விளக்குகள் கூடாது என்பதற்காகவே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

விளையாட்டு மைதானத்தில், பயிற்சி பெறுபவர்கள் நின்றால் விளக்கு வெளிச்சத்தில் அவர்களின் நிழல் எந்த பக்கமும் விழக்கூடாது. இதுதான் கிரிக்கெட் மைதான விளக்குகளின் தரமாகும். இதனை ஆரம்பத்தில் விளையாட்டு துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறியிருந்தேன். எனினும் பொதுப்பணித்துறை சார்பில், தகுதியற்ற ஒப்பந்ததாரரிடம் பணி வழங்கப்பட்டது. தற்போது, விளக்குகள் வாங்கும் தரமான நிறுவனத்தை மாற்றி விட்டனர். 2021ம் ஆண்டு முயற்சிகள் மேற்கொண்டு 2022ம் ஆண்டு நிதியும் வழங்கப்பட்டு விட்டது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை இந்த விளக்குகளை பொருத்தாமல் இருப்பது வேதனைக்குரியது என்றார்.

கண்காணிப்பு கேமராக்கள் சில நாட்களில் செயல்படும்

மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேசிடம் கேட்டபோது, உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் போது, மின்கட்டணம் மிகவும் அதிகம் ஆகும் என்பதால், முதலில் அதனை பொருத்த யோசிக்கப்பட்டது. பின்னர் அதனை எல்இடி விளக்குகளாக மாற்றி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான், இந்த விளக்குகளை பொருத்த வேண்டும்.

கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வரை, அதன் சோதனை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதனை இங்குள்ள அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கும் வகையில், லிங்க் கொடுக்க வேண்டும். மேலும் மானிட்டரும் பொருத்த வேண்டும். இவை ஒரு வாரத்திற்குள் பொருத்தப்பட்டு விடும் எனக் கூறினார்.

The post அண்ணா விளையாட்டரங்கில் வீணாக கிடக்கும் ₹1.25 கோடி உயர் கோபுர விளக்குகள் appeared first on Dinakaran.

Tags : Anna Stadium ,Nagercoil ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு