×

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

டெல்லி: கடந்த 2020-21ம் ஆண்டில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து, விவசாயிகள் மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளனர். தடைகளை மீறி வர முயன்ற விவசாயிகள் மீது டெல்லி போலீசார் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசியதால் டெல்லி எல்லை பகுதிகள் போர்க்களமாக மாறின. பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில எல்லைகளில் போலீசாரும் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் பெரும் போராட்டம் வெடித்தது. சுமார் 13 மாதங்கள் நீடித்த விவசாயிகள் போராட்டத்தால் ஒன்றிய அரசு கதி கலங்கியது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் விவசாயிகள் எதற்கும் அஞ்சாமல் போராடினர். கடும் குளிர், உறைபனியிலும் ஓயாமல் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் 800 விவசாயிகள் பலியாகினர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இறுதியில், விவசாயிகளுக்கு பணிந்த ஒன்றிய அரசு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது. அதோடு, அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது. இதனால், 2021ம் ஆண்டு இறுதியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் தற்போது வரையிலும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்றித் தரவில்லை. இதனை தொடர்ந்து விவசாய அமைப்புகள் ‘டெல்லி சலோ’ போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தன. அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசத்தில் இருந்து பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கம் உள்ளிட்ட சுமார் 200 விவசாய சங்கங்களைச் சேர்ந்த 1 லட்சம் விவசாயிகள் டெல்லி நோக்கி படையெடுத்தனர். கடந்த முறையைப் போலவே நீண்ட நாள் போராட்டத்திற்கு தயாராக 6 மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள், டெண்ட், டீசல், ஜெனரேட்டர் சகிதமாக விவசாயிகள் முழு முன்னேற்பாடுகளுடன் டிராக்டர்கள் மூலம் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.

விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்க மறுத்து போலீசாரும், துணை ராணுவப் படையினரும் தடுப்புகள் அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தடுக்க முற்பட்டனர். போலீசார் அமைத்த தடுப்புகள், கம்பி வேலிகளை தகர்த்து விவசாயிகள் டெல்லிக்குள் முன்னேறி வருகின்றனர். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்திற்க்கு ஆதவராக நாளை முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கபட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்திற்க்கு ஆதரவளிக்க வணிகர் சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Delhi ,Union Government ,Delhi police ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...