×

மலைக்குன்று, ஏரிகளில் இருந்து முரம்பு, வண்டல் மண் கடத்தல் * விவசாய பயன்பாட்டுக்கு எனக்கூறி மோசடி * செங்கல் சூளை, கட்டிடப் பணிகளுக்கு விற்பனை களம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில்

ஆரணி, பிப்.14: களம்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மலைக்குன்று மற்றும் ஏரிகளில் இருந்து முரம்பு மண் மற்றும் வண்டல் கடத்தி விற்பனை செய்யும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் சாகுபடி குறையும் நிலங்களுக்கு வண்டல் மண் மற்றும் முரம்பு மண் பயன்படுத்தப்படுகிறது. எனவே, தேவைப்படும் விவசாயிகள் வருவாய்த்துறையில் உரிய அனுமதி பெற்று ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் முரம்பு மண் எடுத்து பயன்படுத்தி கொள்ள 3 நாட்கள் வரை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விவசாயிகளும் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று ஏரிகளில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து நிலத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முரம்பு மண் மற்றும் மணல் கடத்தல் தொழில் ஈடுபடும் சமூக விரோதிகள் சிலர் அவர்களுக்கு தெரிந்த விவசாயிகளிடம் பட்டா, சிட்டா, அடங்கல் உட்பட ஆவணங்களை பெற்று, விவசாய நிலத்திற்கு முரம்பு மண் மற்றும் வண்டல் மண் தேவை என போலியாக விண்ணப்பித்து உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு மண் எடுக்க அனுமதி பெற்று ஏரிகளில் இருந்து செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் மற்றும் முரம்பு மண்ணை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். மேலும், ஒரு விவசாயி அனுமதி பெற்ற கடிதத்தை வைத்து கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறாமல், களம்பூர் வளையக்கார குன்று பகுதியில் முருகர் கோயில் உள்ள மலை அடிவாரத்தில் மலைகளை உடைத்தும், இலுப்பகுணம், முனியந்தாங்கல் கிராமங்களில் உள்ள ஏரிகளில் இருந்து இரவு, பகலாக திருட்டுத்தனமாக முரம்பு மண், செம்மண் மற்றும் வண்டல் மண்ணை எடுத்து படுஜோராக விற்பனை செய்து வருகின்றனர்.

இவ்வாறு, டிப்பர் லாரி, டிராக்டர்கள் மூலம் ஏரிகளில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்து சென்று, லோடு ஒன்றுக்கு ₹3 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை செங்கல் சூளைகள், ரியல் எஸ்டேட் வீட்டுமனை அமைக்கும் பகுதிகளில் 500 லோடுகள் வரை கொட்டி சமன் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி களம்பூரில் கட்டிடப் பணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து போளூர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து போளூர் தாசில்தார் வெங்கடேசனிடம் கேட்டபோது, விவசாய பயன்பாட்டிற்காக களம்பூர் பகுதியில் உள்ள மலைக்குன்றுகள், ஏரிகளில் இருந்து முரம்பு மண் மற்றும் வண்டல் மண் எடுக்க வருவாய்த்துறை சார்பில் இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றார். எனவே, விவசாய பயன்பாட்டிற்கு எனக்கூறி சில மாதங்களுக்கு முன்பு அனுமதி பெற்ற நகலை வைத்துக்கொண்டு அரசு இடங்கள், மலைக்குன்றுகள் மற்றும் ஏரிகளில் இருந்து மண் திருட்டில் ஈடுபடும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மலைக்குன்று, ஏரிகளில் இருந்து முரம்பு, வண்டல் மண் கடத்தல் * விவசாய பயன்பாட்டுக்கு எனக்கூறி மோசடி * செங்கல் சூளை, கட்டிடப் பணிகளுக்கு விற்பனை களம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் appeared first on Dinakaran.

Tags : Kalampur ,Arani ,Thiruvannamalai District ,Dinakaran ,
× RELATED போலி டீ தூள் விற்ற 5 பேர் மீது வழக்கு 80 கிலோ பறிமுதல் ஆரணியில் உள்ள கடைகளில்